கீற்றில் தேட...

மென்று மென்று மெதுவாக
அசை போடும்பொழுது
அடுத்தவொன்று அனுமதியற்று
உட்புகுந்து விடுகிறது.
பிறகு அதனையும்
மென்று மென்று மெதுவாக
அசை போடும்பொழுது
அடுத்தவொன்று வரும்பொழுது
அந்தியும் வந்துவிடுகிறது.
மென்ற அலுப்பில்
துப்பித் தூங்கிவிடலாமென
நினைக்கும்பொழுது,
குதப்பி அடக்கிய
கொடுவாய் வழிய
விடியலில் கனவு கலைந்து
விழிக்க வேண்டியதாகிறது.
இக்கொடுமையில்விடுபட
விதவிதமாக மென்று பார்த்தாலும்
திகட்டாமல் தின்று கொண்டே
இருக்கிறது இம் மனம்
செமிக்கத் தெரியாத அறியாமையில்.

***

உவப்பின் உத்தேசங்கள்

பார்வையின் மின்னூட்டத்தை
சேகரமாக்கிய ஆற்றலால்
செயல்படும் பொழுது
நீ பெண்ணெனவானாலும்
காதலென மட்டும்
கடந்துவிட முடியவில்லை.

நீயற்ற
ஒளிச் சுருங்கலில்
வியாபிக்கும்
வெளிச்சக் கதகதப்பு
கூடலின் நிமித்த ஆதாயமாக
நெஞ்சை நிறைத்துக்
கொஞ்சி நிற்கிறது.

சுட்டும் விழியுன்
சுடர்ப் பார்வையை
பற்றியெரிய அனுமதியாத
பாதகர்களின் பார்வை
தேகப் பொலிவுகளை மட்டும்
தின்று தொலைப்பதால்
அவைகள்
திறக்காமலேயே போகட்டும்.

இவ்வியல்
ஈர்ப்பின் சாகசங்கள்
சொற்பக் கணங்களென்றாலும்
இக் காத்திருப்பு
ஏக்கமுடைய இன்னொரு காதல்தான்
நான் ஆணெவானாலும்.

- ரவி அல்லது