மேல் சென்ற கண்களை
பாவாடை அழுத்தி
ராட்டினத்திலிருந்து இறக்கினாள்
*
நிலவில் இறங்க முடியாதவன்
கூறினான்
அத்தனை கவிதைக் குப்பைகள்
*
காதல்காரனின் தூண்டிலில்
முள்ளுக்குப் பதில்
முத்தம்
*
வழி நெடுக வண்ணம் சுரண்டி
ஒரு கருப்பு வெள்ளை
காலத்தில் நுழையும் காதல் தோல்வி
*
புல்வெளி இரவில் நடந்து வா
நீந்தும் நிலவொளிக்கு
உருவம் கிடைக்கட்டும்
*
கையேந்தி விடக்கூடாது
கவனமாக கண்ணேந்தி கடந்தார்
புது பிச்சைக்காரர்
*
சிறு விளக்காயினும்
எரியும் ஜுவாலை காண்
அடியே விழும் நிழல் அசதி
*
கன்னம் ஒடுங்கியவள்
ஆப்பிள் தோட்டத்தில்
வேலை செய்கிறாள்
*
வகுப்பறையில் தூங்கிய
விலங்கே
வேட்டையில் சிக்கிக் கொள்கிறது
*
எந்தப் பறவை ஏமாற்றும்
விழுதுகள் தாடியல்ல
தாலாட்டு
- கவிஜி