1.
பிடிக்காத கசப்பை
கண்களை மூடி
விழுங்குகிறோம்.
பிடித்த விருந்தை
அதே கண்களை மூடி
ரசித்து சுவைக்கிறோம்.
என்னைப் பிடிக்காத
வெறுப்பின் நிழலில்
கண்களை மூடி
என்னைப் புறக்கணி.
நான்
உன்னை விரும்பி,
வெட்கத்தில் கண்களை மூடி,
நீ கடக்கையில்
மனதால் சிலாகிக்கிறேன்!
2.
யாரையும் வேண்டாமென
தள்ளாத கடவுளை
யாரும்
வேண்டாமென
தள்ளுவதில்லை!
3.
மழைக்காக
நனைந்து கொண்டு
ஒருமுறை பாருங்கள்
மழையோடு இணைந்து!
4.
அடையாளங்களைத் துரத்தி
அலுத்துப் போய்
அமைதியில் தோய்ந்தான்.
அடையாளங்களைத் துறந்தவன் என்னும்
புது அடையாளம்
அவனைக் கடந்து சென்றது!
- அ.சீனிவாசன்