எல்லா நாள்களுக்கான மழையை
ஒரே நாளில் பொழிகிறது
உன் அன்பு
பகலெல்லாம் தேடிய இரையை
ஊட்டிவிடும் தாய்ப்பறவை
நீ எனக்கு

சித்தார்த்தனைப் புத்தனாக்கிய
போதிமரம்
நீ எனக்கு

பரீட்சை நடத்திய பின்பு
பாடம் நடத்தும்
காலத்தைப் போன்றவன்
நீ எனக்கு

உன்னால்தான்
என் கண்ணீர்த்துளிகள்
தேனடைகளாக மாறுகின்றன

மந்தையில் நிற்கும்
தாயைக் கண்டுபிடிக்கும்
ஆட்டுக்குட்டியைப் போல
உன்னைக் கண்டடைகிறேன்

மலையை அசைத்துப் பார்க்கும்
வேராக வந்தாலும்
கனிந்த உன் நினைவுகளால்
தாய்மை கொள்கிறேன்

- முனைவர் சி.ஆர்.மஞ்சுளா

Pin It