விதவிதமான வண்ண வகையான
காலியான மது புட்டிகளை
எங்கு வீசுவீர்கள்?

நாயற்ற வீதியில்
நேற்றிரவு எலும்புகளை
என்ன செய்வீர்கள்?

தானற்ற தவிப்புகளை மூச்சிரைக்க
மூத்திரமிட்ட சந்துக்களை
எப்படி கடக்கிறீர்கள்?

வீறிட்டு உபயோகித்த
காண்ட சுருள்களை
எப்படி அழிக்கிறீர்கள்?

உள்ளத்தின் ஆழம் கொண்ட
நஞ்சுகளை
பொறாமைகளை
புறணிகளை
போட்டுக் கொடுத்தலை
எவ்வழியே ரீ சைக்ளிங் செய்கிறீர்கள்?

முகநூல் நண்பன்
விழா புகைப்படத்தை
குறிப்பாக புத்தக வெளியீட்டு
விழா புகைப்படத்தை
கண்டும் காணாமல் ஒரு லைக்கிட
விரலின்றி
எப்படி ஸ்க்ரோலிங் செய்கிறீர்கள்?

கழுத்தறுக்கும் சொற்களை
சைட் டிஸ்க்கு வைத்துக் கொண்டு
அடுத்த கணமே கழுத்தறுபட்டவனிடம்
அன்பொழுக எப்படி பேசுகிறீர்கள்?

காணும் போதே வரிசையை
நகர்த்தி விட்டு
நம்பும்படி நின்று கொள்ள எப்படி
தெரிந்து கொண்டீர்கள்?

எதிர் வீட்டுக்காரனுக்கு வந்த தபாலை
கிழித்தெறிந்து விட்டு எப்படி அவனுடன்
வாக்கிங் போகிறீர்கள்?

சாமி கும்பிட்டு வரும் வழியில்
வண்டிக்கு குறுக்கே வந்து
விடுபவனைப் பார்த்து அடுத்த நொடி
ங்கோத்தா என்று எப்படி முனங்குகிறீர்கள்?

தொடர்ந்து கேள்வி கேட்பவனை
லூசுப்பய என்று
எப்படி ஒரு வார்த்தையில்
தவிர்த்து விடுகிறீர்கள்....?

- கவிஜி

Pin It