முடிவற்ற கேள்விகளை
வைத்துக் கொண்டு அலைகிறேன்
அடித்துத் துவைக்க ஆளுக்கொரு
தடிக்கம்போடு வருகிறார்கள்
பேசியெல்லாம் நடந்ததெல்லாம்
நிஜமும் உண்மையும்.. அசலும்.. உரிமையும்
அதுவல்ல எங்கள் போக்கு எங்களுக்கு சங்கூதுங்கள்
என்பது தான் சங்கிகளின் வாக்கு
உலகளாவிய நட்சத்திரங்களை உள்ளேயே
எரிய விடுவதில் லாபம் என்ன
தான் கொண்ட அறிவையெல்லாம்
ஊன் கொண்ட மானுடன்
பறிப்பதில் கேள்விகள் கண்டிப்பாக எழும்
திரும்பிய பக்கமெல்லாம் தூக்கில் தொங்க விடும்
இறையாண்மையைக் கண்டு பதட்டமடையாமல்
என்ன செய்வது
அற்புத விளக்கில் இருந்து வெளி வரும் பூதம் தேடி
அலையும் புரியாமையைக் கண்டு
நாணுவது மட்டும் போதாது
நாக்கைப் பிடுங்குவது மாதிரியும் கேட்க வேண்டும்
ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து தலையில்
துண்டைப் போட்டுக் கொண்டு
உலகம் சுற்றி பொருளாதாரம் விளக்கும்போது
தலைக்கு மேல் போன மதச்சாயம் பற்றியும் விளங்கும்
உரிமையற்ற பேச்சு சுதந்திரமற்ற மேடை
ஆமாம் சாமி போடச் சொல்லுதோ அரசு
எதிரே இருப்பதோ
எந்தப் பக்கம் உரசினாலும் தீ பற்றும் இளைய முரசு
உங்கள் கதவுகளை எங்கள் கால்கள் எட்டி உதைக்கும்
தலை வெட்டினாலும் முண்டம் முட்டும்
தார்மீக சத்தம் அடங்கா....
பல்கலைக்கழக பட்டாம் பூச்சியின்
நாட்குறிப்பில் கூட ரத்தம் மினுங்கும் எழுத்துக்களை
சொட்ட வைத்திருப்பதெல்லாம்
தர்மம் ஒரு நாள் கவ்வியே தீரும் சூதுகள்
அகம் புறம் நீண்ட உரிமையின் மண்டையை
உடைத்து விட்டு பதுங்கிக் கொள்தலில் பச்சோந்தித்தனம்
வேறு வழி இல்லை பச்சையாய்ப் பேசுவதைத் தவிர
உற்று நோக்குங்கள் என் மக்கா
இறுதி வரியில் இதயம் கசிகிறது
தோழன் தலையில் இருந்து கொட்டுவது
நேருவின் ரத்தமும் தான்.......!

- கவிஜி

Pin It