யார் கைப்பற்றி என்னை
வெளிச்சத்திற்கு இட்டுச்செல்ல..
கேட்கப்படா அலறல்களும்
கவனிக்கப்படா கதறல்களும்
எதிரொலிக்கும் நினைவுகளில்
சிதறுண்ட சிற்றிதயத்தை
சேகரித்து வைக்கிறேன்
அறியப்படா முடிவுகளை
என்னில் திணித்தவர்களுடன்
மாபெரும் போராட்டத்திற்கு
தயார்நிலையில் இருக்க....
என்னைக் கூறுபோடும்
அதிகாரத்தை எவரளித்தார்
இம்மிருகங்களுக்கு?
என்ன தவறிழைத்தேன்
இக்கொடூர முடிவிற்கு?
காலம் முழுதும்
ஒட்டிக்கொண்டிருக்கும்
இவ்வடுவிற்கு?
கணநேர பரிதாபம் உதிர்த்து
இன்னொரு செய்தியாகக்
கடந்து போகாது
இவ்விருளில் இருந்து
விடுவிப்பவர் எவரோவென
தேடித்துழாவுகின்றன
இச் சிறு விரல்கள்..

 - அருணா சுப்ரமணியன்

Pin It