ரசனை கெட்டவர்களைப் பற்றி
உனக்கென்ன கவலை
தின்பவன் போல பார்ப்பவனை
கண்டும் காணாமல் நட
பச்சையாய் முணுமுணுப்பவனை
அணுவளவும் நினையாதே
இச்சையாய் நோக்குபவன்
இருக்கட்டும் போ
கண்கொட்டாமல் பார்த்து மெல்ல
புன்னகைப்பவனுக்கு
இன்னும் ஒரு முறைகூட
நடந்து காட்டலாம்
யாருக்கு வாய்க்கும்
நடைக்கும் ஜடைக்குமிடையே
தாளமிடும் இசைவும்
நாணமிடும் அசைவும்
மலர்க்குன்றுகள் பூத்துக் கொண்டே
இருக்கட்டும்
மத்தளக்கதைகள் மயங்கியே
கிடக்கட்டும்
பின்னழகில் பின்னி எடுக்கும்
பூங்குன்றின் நடையை
ஒருபோதும் விடாதே
அது ராணி நடை
அது ராஜ கொடை...!

- கவிஜி

Pin It