கொலைக்காடு ஒன்று
வெவ்வேறு மர்மங்களால் ஆனது
முட்களால் ,வாள்களால்,
துளைக்கும் ரவைகளால்,
விடமேறிய சொற்களாலும் கூட.
அவரவர் மனங்களின்
எடைகளைப் பொறுத்தது
சாவுக்கு சாவு மாறுபட்ட
வெகு நீண்ட நாளொன்றில்
நான் வரைபடத்தோடு
கொலைக்காட்டுக்குச் சென்றேன்
எட்ட நின்று அமிழ்தம்
கவிழ்ந்த விடத்தில் கை நனைத்தேன்
பருத்திச்சுளை தின்று

பாற்பற்கள் கொழுத்திருந்தன
ஆயிரம் நீர்ச்சுனைகள்
பருகிய கணங்களில்
பாலைச்சுரந்தன
வெவ்வேறு காலம் அக்காட்டை
கொலைத்தபடி எரிந்தது
கொலைக்காடு எப்போதும்
காடுகளுக்கு அப்பாற்பட்டது
வெவ்வேறு மர்மங்களால் ஆனது 

00 

கொஞ்சம் கொஞ்சமாய்

கரைந்து கொண்டிருக்கும்
எஞ்சிய பனிப்பொதி
பலதிசைககளின் பரிமாணம் என்கிறேன்

குழலுக்குள் சஞ்சரித்து
விம்மும் குரலலைகளை
குமிழிகளில் அவ்வப்போது

உடைக்கிறது என்கிறாய்

ஒருவருக்கு ஒருவர்
முகம் திறக்கும் தருணம்
எப்போதும் ஓய்வதில்லை
இன்னும் ஒரு நாளுக்கு அல்லது
இன்னும் ஒரு கணத்திற்கு

அப்புறம் எப்படி
கிளைகளில் மாறி மாறி
தன்னை வரைகிறது பறவை

நெருப்பை எடையிட்டாலென்ன
நீரை அளந்தாலென்ன
பூத்தலும் உதிர்தலும்
மரத்தின் முகவரி

பறவை எச்சத்தில்

நிரம்பியிருக்கும் மரத்திற்கு
முகவரி எதற்கு
முகம் மட்டும் போதும் தானே 

00 

கடல் மொழியின் கிளையில்
சிறகுகளை விரிக்கும் பறவையானேன்,
அருவியின் பரணில்
காட்டை கூட்டி வரும் இரவுச் சூரியனாகிறாய்,
நெய்தலா மருதமா
இரண்டுங்கெட்டான் நெருஞ்சி முட்பாதம்,
ஊதிப்பெருத்த கனவுள்ளும்
இன்னும் காயாத இரத்தப் பிசுபிசுப்பு,
பூச்சொரிய கிளம்பியது
கிளை பிரிந்த மரத்தின் துயர வாசம்,
அடப்போ நண்பா
ஆதிக்காட்டின் அன்பின் சுனை

ததும்பத் ததும்ப வசீகரித்த
ஆகாசத்தூறலில் ஈரமில்லை
பூமி முளைக்கவுமில்லை. 

00 

மனமுகட்டில்
ஆதூரமாய் தேங்கியிருக்கும்
சாம்பல் மௌனத்தை
பிழிந்து ஊற்றுகிறேன்.

தடாகத்தின் ஆழ்ந்த
பனிசூழ் பரப்பில் அலைகின்ற
வழிப்போக்கனாய் இருக்கலாம்

ஆயினும்
பறவையின் சிறகசைப்பாய்
செறிந்தெழும் பேரோசையோடு
வெளிச்சமாய் இருக்கிறேன்

பெருகிய மனித ஆற்றில்
குரலற்ற பாறைகள்
நாநுனியில் பதுங்கி இருந்தன

அந்த மகா விருட்சத்தில்
அர்த்தங்கள் விரியாத
ஊமைப் படபடப்புடன்
இன்னும் மொட்டுச்சொற்கள்

மோனத்தவமிருந்து உயிர்சனித்த
என் கடற்பாசி முத்துக்களையும்
நீலச்சங்குகளையும்
கடல் கொண்டால் என்ன ? 

00 

சொற்களின் முனகலில் புதைந்திருந்தது
தவறி விழுந்த புன்னகையின்
முளைதகவற்ற விதை

என்னைக் கேட்காத என் சிறகுகளை
இப்பொழுதே நிறுத்தி விடுகிறேன்

சர்வ நிச்சயமான இருளின் மௌனம்
ஒளியிலும் நுண்ணிய

சூரியன்களை பரிசளிக்கின்றன

உயிர் பிளந்தெறியும்
வார்த்தைகள் என்னிடம் இல்லை
இங்கு எவர் நாவும்
அவலங்களை பேசும் படியாக இல்லை

மனித அன்பு
தீராப் போதை மிகு ருசியின்
கிளைத்த நீலத்தில் மிரட்டி மிரட்டி
வாழ்வைச் சுற்றியிழுக்கும்
இராட்சத பறவை

ஆயினும் மீளமுடியாத
துயரக் காடுகளுக்கும்
நிழல் படியாத சொற்களுக்கும்
இடைவெளி அற்றிருத்தலிலேயே
இருக்கிறது நேயமிகு வேர் முடிச்சுக்களில்
ஆளுக்கோர் கனிந்த இதயம் 

00 

செயலற்ற இதயங்களில் அமர்ந்திருப்பது
புவியின் அடிப்பாகம் நடுங்குவதைப் போன்றது

தனிமையின் முரட்டுத்தவளைகள்
நினைவுருத் தண்ணீரில் தாவுகின்றன

வாலைச் சுருட்டி
அகல வாய்திறக்கிறது
மனதிற்குள் மூத்து வயதடைந்த வெயில்

கைக்குள் அடங்காத மென்மையில்
திகைத்த பூக்கள் வருடலில் தோற்கடிக்கப்பட்டன

அவிழ்ந்து கொண்டிருக்கும்
எதன் நடுவிலும் மறைந்திருக்கிறது
எப்போதும் ஒரு பொருளற்ற ஆயிரம் உண்மைகள்

நிலம் நனைவதற்காக
மழை வீழ்ந்து கொண்டிருக்கிறது
கரைவது நிலமா மழையா? 

00 

குறுக்குச் சுவர்களோடு
ஓய்ந்திருக்கின்றன இந்த வீடுகள்
ஒவ்வொரு சுவர்களிலும்
அதீத ரகசியங்களை பூசி இருக்கிறார்கள்
எல்லா வரவேற்பறைகளிலும்
நாற்காலிகள் மௌனமாக அமர்ந்திருக்கிறது
எல்லா அறைக்குள்ளும்
மரணப் படுக்கைகளுக்கு இடமிருக்கிறது
சமயலறை ஓரத்தை
பழங்கள், பூக்களின் காடு
முட்களை பரப்பி இருக்கிறது
குளியலறையில் வாசகங்கள்
தம்முள் நனைந்து கொண்டிருக்கின்றன
விருந்தாளியாக இருக்கும்வரை
இந்த வீடுகளை நீங்களே தூங்க வைக்கலாம்
எப்போதும் நினைவிலிருந்து
திறந்திருக்கிறது வாசல்கள்
ஆனால் உட்பக்கம் தாழிட்டபடி

இந்த வீடுகள் ஒருபோதும் வீடுகள் அல்ல. 

00 

எதிர் மாடத்தில் இருந்த சாம்பல்புறா
என்னுள் எழுந்த வெண்சிறகொன்றுடன்
பறந்து கொண்டிருந்தது

தண்ணீர் ஊற்றி வளர்க்கிறேன்
என் மாந்தோப்பெங்கும்
குயிலோசையின் நறுமணம்

கிழக்கும் மேற்கும்
அடிக்கடி திரும்பிப் பார்க்கிறது
தாழ்ப்பாள்களற்ற என் உள்வீட்டை

என் தாள்களுக்கு கூவும்சக்தி உண்டு
உங்களின் இசையாவது
உங்கள் குரல்களைப் பொறுத்ததல்லவா

நீலப்பறவைகளை நீங்கள் சேமியுங்கள்
அதற்காகவெல்லாம்
நீலப்பறவை ஆகமுடியுமா என்னால் ? 

00 

அன்பின் கேலி
என்னைத் திரும்பிப் பார்க்கிறது
கண்களை அகலவிரித்து
கலங்கிய குளத்தில் குதித்த
என் நிழலைத் தேடிக் கொண்டிருந்தேன்
வனங்களைத் திறப்பவனுக்கு
சுழல்திசை எதற்கு
ஊரெங்கும் திரிகின்றன
அவ்வப்போது அவிழும்
ஆறுகள்
ஆறுகளுக்கு ஊர் உண்டா
தண்ணீரின் ஈரத்திற்கு
ஏதும் பதிலி உண்டா
இதோ இக்கடக்கும் கணத்திலும்
இன்னொரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது
அதற்கு ஓடுவது தானே தெரியும். 

00 

சிறையில் இருப்பதாக நினைப்பவர்கள்

என்றாவது வீடென நினைக்கும் பொழுது
நிசப்தத்தில் திடுக்குறுகிறது சிறை

உலகிற்கும் நடுங்கும் பாறைகளுக்கும் இடையே
மிதந்து கொண்டிருக்கின்றன
நீல முகட்டின் நறுமணம்,
கை அழுந்திய பவளப்படுகையில்
முகம் பிய்ந்திருக்கிறது கடல்

சிவப்பேறிய கரையில்
மோதி வழிந்தோடும் குமிழிகளை
இரு கைகளாலும்
ஏந்தியபடி நிற்கிறேன்

கீழே நழுவவிட்ட நொடிகளில்
பறவையின் தீனமான குரல் வழிகிறது
என் சிலுவையில்
நான்கே நான்கு ஆணிகள்
அதற்காகவேனும் நான் உயிரோடிருக்கிறேன்

இரண்டாவது தடவையாகவும்
தொலைவின் மூடி
தன்னைத் திறந்து மலர்த்தியிருக்க
மீண்டும் மீண்டும் தோற்று
சருகுகளுக்கிடையில்
மறுபடியும் தெறித்திருக்கிறது என் வீடு

- தமிழ் உதயா, லண்டன்

Pin It