நீ ஒரு முறைதான்
என் வீதியின் வாயிலைக் கண்டிருக்கிறாய்
சில நாட்களாக
நான் உனக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறேன்
மரியாதை நிமித்தமாகத்தான்.

நீ வரவேண்டும்
என்று எண்ணியிருந்தேன்
நீ வரும் வேளை எதுவென
நான் எண்ணவில்லை
ஆனால்
நீ வரவேண்டும்
என்று ஒரு குரல்
உள்ளுர அழைப்பு விடுத்ததை
நீ அறிவாய்.

என் வீதியின் வாயில்கள்
பல சந்துகளைக் கொண்டிருப்பதை
நீ அறிந்து கொண்டிருக்கிறாய்.

ஓர் 'ஒடுக்கம்' வீதியில்
உனக்குத் தென்பட்டிருந்தால்
அங்கு ஒரு நரகல் உன்னி
மேய்ந்திருக்கும்.
அதை நீ கண்டதால்
உன் காலடித் தடம் வர மறுத்திருக்குமோ?
என உள்ளொடுக்கம் என்னுள் சூழ்ந்தது.

உன் வீட்டின் மொழியானது 'பாஷை'
என் வீட்டின் மொழியானது 'வட்டாரம்'
சில 'ஆயிடுத்து'கள்
உன் உதடுகளில் வெளிப்பட்டன
என் உதடுகளில்
சில 'ஆவுல'கள் வெளிப்பட்டன

முன்னே நீ நடந்து சென்ற போது
பின்னே ஒரு 'ஒடுக்கம்'
சிலரின் பார்வைகளால்
அலங்காரமாக ஆக்கப்பட்டன.

சமகாலம்?
சம நிலையற்ற காலத்தின்
தொடர்ச்சி நீள்கிறது
நம் கண்முன்னே.
பாஷையும் வட்டாரமும்.
சமுதாய முரண்களின்
குறியீடென குறித்தால் தவறென்ன?

- இல.பிரகாசம்

Pin It