உன்னைத் தானே எழுதுகிறேன்
ஒன்று கூட நீயில்லை
நீ நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறாய்
எப்படி நான் விழிக்காமல் இருக்க முடியும்

பறந்து கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சி
திடீரென பூவில் அமர்வது
பறக்காத ஒரு வண்ணத்துப்பூச்சி
அமர்ந்திருக்கிறது என்பதாலா

உன்னிடம் சொன்னவற்றை விட
நான் சேகரித்த மௌனங்களில் தான்
இன்னும் மொட்டு விட்டுக் கிடக்கிறது காதல்

அந்த உயிர்க் கொடியில் உலர்ந்த சருகுகளில்
உன் மூச்சும் என் பேச்சும் கலந்து உலர்கிறது
தூவானத்தில் ஒரு முறை நனைந்து
உலரட்டும் விட்டு விடு

நான் தேடித்தான் எடுத்தேன் உன் மனதை
திருப்பித் தருவதாய் இல்லை
உன் ரசவாத வித்தைக்கு
பரிசோதனைக் கூடம் என் பாறை நெஞ்சா
உடைந்து நொருங்குகிறது
மீளப் புதுப்பித்துக் காட்டு

மழை போதையில்
உயிரைக் குடித்த ஈசல்களாய்
நீ பிழிந்து ஊற்று
உனக்கானது தானே என் இதயம்

சட்டென்று முகிழ்த்தது
அரைக் கணத்தில் ஒரு முழு வாழ்க்கை
இந்த ஜாலமெல்லாம்
எங்கே பயின்று கொண்டாய் ஆதித்யா

00

மனதின் வரைபடத்தில்
வண்ணத்துப் பூச்சியாய்
சிறகடிக்கும் சொற்களை

பிசைகிறது என் விரல்கள்
திடீரென கண் மலைகளின்
ஊற்றுநீர் இறங்கி
நதியின் மழைநீரில் குளித்தது
மழை பறித்த பூக்களை
படபடப்புடன் தோளில் சாய்த்தாய்
என்னைத் திறக்கும் புத்தகத்தையும்
ஒற்றை ஜன்னலையும்
ஒருபோதும் பூட்ட மனமில்லை எனக்கு
வானத்தை பார்த்தபடியே
கண்ணயர்ந்த கணத்தில்
கவிதையும் நீயுமாய்
மஞ்சள் தட்டு மெதுமெதுவாக
நடந்து வருகிறது
என் காதல் விளைச்சலை
அங்கே கட்டித் தொங்க விட்டு
மிருதுவான சொற்களை
பிசைகிறது விரல்கள்
பூக்களை வனைந்து
காயங்களில் சொருகி
விழிகள் புனைகிறது
புதியதோர் வரைபடம்
நீ இல்லாத கணங்களையும்
விரல்களால் உன் குரலை
மிக மிருதுவாக வரைந்த ஓவியங்கள்
சுவரெங்கும் சிதறிக் கிடக்கின்றன ஆதித்யா

00

ஆயிரம் நாற்றுக்கள்
குமிழ்ந்தெழும் அந்தக் கிளையில்
வகுப்பறையின் கனமோடு
காத்திருக்கிறேன்
வழி தப்பி வந்து தலைக்கு மேல்
வட்டமிட்ட பறவையாய் நீ
சுழியில் கரையும் ஆழிக்குள்
பனித்துளி படர்ந்த
கால் தடங்கள்
கீற்றில் முறிந்து நடக்கிறேன்
என் வாழ்விடத்தை மாற்றிக் கொள்ள,
பூந்தோட்டமொன்றை விற்பனை செய்து
கொண்டிருக்கிறான் அவன்
பூக்கள் தம்முள் மாறி மாறி
உதிர்க்கின்றன இதழ்களை
ஒரே ஒரு பூவின் வாசம் என்னை முகர்கிறது
வளர்ந்து பெருகி காற்றை அசைத்தது
என்னுள் நீ ஊர்ந்த தடம் ஆதித்யா

00

எரிதழலில் மூழ்குமா சூரியன்
என் கடலாய் கவர்ந்திழுக்கும்
அலைச்சுழல் அல்லவா நீ

விழுங்கும் மூச்சில் கலக்கும்
முரட்டுக் காற்றை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்
அது புயலை முடுக்கி விடுகிறது
நொய்த நுரையீரலில்

விடை தெரிந்த வினாக்களை
நா உச்சரிக்கிறது
நஞ்சையே முறிக்கும் மருந்து
உன் நா தயாரிக்கும் எனவறிந்து.

சுற்றி மறைக்கப்பட்ட
வானத்தை உடைக்கிறேன்
காயத்தை தழுவும் இறக்கைகள்

விரிப்பதைத் தவிர
துயர்களை இருண்ட வீதியில்
கொட்டி விடுவதற்காக.

எனக்கான முகில்களை உருவாக்குகிறாய்
அந்த முகில்களுக்கு மேலே
நான் மலையேறிக் கொள்கையில்
என் காயங்கள் உன்னில்
சிவப்பேறி இருக்கக் கூடும்.

பூப்பந்தலின் நிழலில் உன்னை
இளைப்பாற்றுகிறேன்.
எவ்வாறு இருப்பதாக நீ நினைக்கிறாயோ
அவ்வாறே என்னை மகிழ்ச்சியில் விரித்து
துயரில் மடக்கி காயங்களின் கழிம்புகளை
உன்னில் படர்த்துகிறேன்.

பேரலைகளைத்
தாண்டுவதற்கான உத்தியாய்
நெற்றியை முத்தமிடுகின்றன
உன் தளிர்க் குஞ்சுகள் கீற்றென ஈரலித்து.
நீ ஒளியா நிழலா மரமா "சொல்" ஆதித்யா

00

திறக்கும் கடற்குவளை எல்லாம்
நேசத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறாய்
ஆவியாகி உப்பைச் சேகரிக்கிறேன்

நூல்களை திரித்து ஒளிர்த்தும்
தாய்ப்பிறை ஒன்றை
அனுப்பி வைக்க உன்னால் முடியும்
தீய்ந்து போகிறது கறுத்த ஊர்

என்பது தெரியாமலிருக்குமா

மனதின் எல்லையில் பதற்றம் நிலவுகிறது
நீ அன்பின் ஊற்றைக் கடத்துகிறாய்
ஏரிக்கரையில் வீழும் அருவியின்
நீர்ப்பாய்வு போல மென் சூட்டில்

குளிர்தாரகை ஒன்று சேதி சொன்னால்
திருப்பி அனுப்பி வை
அதனுள் உன் விழி பொருத்தி

விடியலை தக்க வைத்துக் கொள்கிறேன் ஆதித்யா

00

இரண்டு கைகளையும்
ஒரு சேர அள்ளிப் பருகிய நீரில்
நீ மூழ்கிய மூச்சு குமிழ்த்தது
என் சுவாசமாய்

கொத்தி உடைத்து
ஆயுள் புடைத்த மனக்காகம்
ஈர மொழியில் கூடு கட்டியது
வாழும் குயிலுக்கு

கரையொதுங்கிய உயிருக்குள்
பாய்மச் சுழியில் மழையின் நீர்மை

ஒன்றுமே இல்லை
நைந்திருப்பினும்
நிறம் அழியாத பூக்களில்
வேரின் இதயம் நீயென
துடித்துக் கொண்டே இருந்தது ஆதித்யா

00

உள்ளங்கையணையில் சாய்ந்துறங்கும்
எழுத்துக்களின் இதயத்தில்
உன் நினைவுகளின் ஈர உடல்

மிதந்து வரும் அலைநுரையெங்கும்
கால்த்தடம் கலைந்த மீதியாய்
உலரும் வெண்மதிமுக நிழல்

பலவந்தமாக அபகரித்துப் போன
காற்றின் மொழியில்
மிதந்து மூழ்கும்
ஒரு காதல் புழுத்தூண்டில்

வளர்த்த சிறைச் செட்டையில்
ஒரு வண்ணத்துப் பூச்சியின்
வெல்ல முடியாத
எட்டுநாள் சுவாச முடிச்சு

தேங்கிய பள்ளத்தில்
வளர்ந்து பெருகிய தவளை முட்டைகள்
அடை மழையின் புழுதியேறிய புயல்

கொஞ்சம் நீரும்
கொஞ்சம் மண்ணும்
இன்னும் சித்திக்காத
துளிர் விடும்
பிஞ்சு வனாந்தரத்தில் கனவு ராத்திரி

கவிழ்த்துக் கொட்டிய
எழுத்துக் கூடையில்
கடலா அலையா நுரையா
எது நீ "சொல்" ஆதித்யா!

00

அந்த ரயிலின்
ஜன்னலோர இருக்கைக்கு
இந்தக் காடு தெரியும்
மலை தெரியும்
பரந்திருக்கும் வானம் தெரியும்
விழுந்து தெறித்த மழை முத்தத்தால்
பனிக்கவும் தெரியும்
ஏன் உன்னை விட
என்னையும் அதிகம் தெரியும்

கருங்கல் சிற்பத்தின்
கண்களில் இருந்து
வடிந்து கொண்டிருந்தது
சிற்பியின் கருணை

கடல் மிதித்த
உப்புத்தரையெங்கும்
நதியின் கேவல்
"ஓ"வென்று கேட்கிறது

நிழலைப் பிரிந்து
தொலைந்து போனேன்
கொஞ்சம் தேடித்தான் பாரேன்

உன்னிடமா ஆதித்யா

00

யாருடனும்
பேச ஒன்றுமில்லை
கணம் ஒவ்வொன்றும்
புரிய நிறைந்திருக்கிறது
பார்க்க வேண்டும் என்கிறேன்

காற்றைப் பிடித்து வீசுகிறேன்
பற்றிப் பறக்கும் சிறகு விரித்தலில்

துயிலும் காலக்கிளை

மௌனமாக இறங்கும்
மழையினூடே பெரும் சலனத்தை
பொழிந்து பிரிந்து போகிறது
ஒரு துளிக்காற்று

நுனி துளிர்த்து காய்த்துப் பூக்கும்
இலை விளிம்பில் வடிகிறது
சூரியக் குருத்துகள்

பிரிந்து விட மனமில்லா
மண்ணின் வாசம் கரைகிறது
ஓர் ஆற்றின் இறுகப் பற்றிய தழுவலில்

விடியலில் பூவொன்றை
வரைந்து போன அந்த வேர் நுனியில்
ஈரவாசம் துளிர்த்திருந்தது

இதில் எது நீ சொல் ஆதித்யா

00

இது முகவரியற்ற மேகம்
எங்கெங்கோ அலைகிறது
உன் வானத்தின்

கோணத்தை அளந்தபடி
நினைவூற்றி வளர்க்கும் உன்னை
வேரோடு பெயர்த்திருக்கிறேன்
உயிருக்குள் பதியம் வைக்க

நீ ஒரு தீராத ஞான தாகம்
பருகிக் கொண்டே இருக்கிறேன் நான்
ஜன்னல் வழி நுழைவேன்
உன் பிராண வாயுவாய்
நீ தூங்கு
நான் விரல் கோத வேண்டாமா

பத்திரப்படுத்திய
ஓர் ஆயுள் நிரப்பியை
வேறு எதனால் ஆசுவாசப்படுத்த
நெடுதுயர்ந்த மரமொன்றாய் நான்
நிழலில் நீ இளைப்பாற

வேண்டுமல்லவா ஆதித்யா

00

வெள்ளிக் கம்பிகளை நீட்டி
குடை விரித்திருந்த நீலவானத்தை
முனை மடங்காது
முத்தித்துக் கொண்டிருந்தன
சிவந்த ரோஜாக்கள்
குளிர்ந்து மிதந்த முன்னிரவில்
திரண்டுறைந்திருந்தன
ருசியேறிய இருசுவாச வேர்கள்
உறக்கத்தைப் புடைத்து
உன் நெஞ்சில் என்னை எறிந்திருந்தேன்
தோள்களில் வளர்ந்த சிறகுகளுடன்
நள்ளிரவின் இமைகள் துவள
நீ வந்திருந்தாய்
விரகித்துப் புகைந்து கொண்டிருக்கிறது
கணை பாயும் மேகம்
உப்பரிகையின் விளிம்பில் ஆகர்ஷித்து
சிந்திக் கொண்டிருக்கும்

மழையின் ரசவாதத்திற்கு
உன் பெயரிட்டேன்
கடைசி அலையேறித் தழுவுவது போல
சுவாசத்தின் கட்டாயத்தில்
நம் நிழல்களின் பூமிக்குள் அவை
கற்குன்றத்தின் வலம்புரிச்சங்குகளாய்
ஊடுருவிப் பாய்கின்றன
புறாக்கள் இறகு கோத
பின்னிரவு தன் அலகால் எழுதுகிறது
கரையை விட்டிறங்கி
கடலுக்குள் சென்று விடலாம் தான்
இப்போது நிலத்தில் நீந்திக் கொண்டிருப்பது
நீயா நானா சொல் ஆதித்யா

- தமிழ் உதயா, லண்டன்

Pin It