ஒரு கூட்டுழைப்பு
கோடிக்கணக்கான இதயங்களின் துடிப்பை
வேகமெடுக்கச் செய்கிறது
ஒரு கூட்டுழைப்பு
கோடிக்கணக்கான இமைகளின் துடிப்பை
நிறுத்திவைத்து ஓடுகிறது
மனிதக் கூட்டுழைப்பு
என்ன செய்யும்
மனிதக் கூட்டுழைப்பு
எல்லாமும் செய்யும்
காற்றுக்கும் மழைக்கும் அழியாத
பிரம்மாண்டங்களை சிருஷ்டிக்கும்
வரலாற்றை உருவாக்கும்
புரட்சிகளைப் பிரசவிக்கும்
காலங்களை உந்தித் தள்ளும்
கால்பந்தை உதைக்கவும் செய்யும் 

விளையாட்டில் அழகானதும்
அழகியலின் சொரூபமாகவும்
கால்பந்தாட்டம் ஜொலிக்கிறது
உலகத்தின் அதிகமான இதயங்கள்
கால்பந்தாட்டத்தைக் காதலிக்கின்றன
உலகத்தின் அதிகமான கால்கள்
கால்பந்தை துரத்துகின்றன
மைதானத்தின்
ஒருபக்கத்திலிருந்து
இன்னொரு பக்கத்திற்கு
கால்பந்து நெருங்கும்போது
பார்வையாளர்கள்
படபடத்துப் போகிறார்கள்
இருக்கையில் அமர்ந்திருந்தாலும்
நனைய நனைய
வியர்த்துப் போகிறது அவர்களுக்கு

மைதானத்திற்குள்
வீரர்கள் மட்டும் ஓடவில்லை
பார்வையாளர்களையும்
இழுத்துக் கொண்டே ஓடுகிறார்கள்
வீரர்கள் பந்தை
விரட்டுகின்ற வேகத்தில்
பச்சைப் புல்வெளிகளும்
பற்றியெரியத் தொடங்குகிறது
காற்றைக் கிழித்துக் கொண்டும்
பந்தைத் தள்ளிக் கொண்டும்
ஒவ்வொருவரிடமும் தப்பித்து
இலக்கே குறிக்கோளாய்
ஓடுகிறானே வீரனொருவன்
அவனைப் பாருங்கள்
தடைகளைத் தாண்டி
முன்னேறிச் செல்வதை
தடைகளை உடைத்து
இலக்கை அடைவதை
அவனிடம் கற்றுக்கொள்ளுங்கள்

ஒருவனும்
ஒருகணமும்
ஓய்ந்திருக்கலாகாது
ஓடவேண்டும்
ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்
கால்கள்
ஓடிக்கொண்டேயிருக்க
கண்கள்
பந்தின் மீதுமட்டும்
நிலைகுத்தியிருக்க
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவரும்
இயக்கத்திலேயே
இருந்து விடும்
இந்த விளையாட்டு
வெறும் விளையாட்டா
கால்பந்தாட்டம் தவமல்லவா
கால்பந்தாட்டம் கலையல்லவா

இயங்கு
இயங்கு
இயங்கிக் கொண்டேயிரு
இயகத்திலேயே இரு
இதுதான்
இவ்விளையாட்டின் விதி
இயக்கத்தில்
எல்லாமுமே அழகுதான்
உதைக்கும் வீரர்கள்
உதைபடும் பந்து
உணர்ச்சிக் கொந்தளிப்பில்
உட்கார்ந்திருக்கும் ரசிகர்கள் என
இயக்கத்தில்
எல்லாமுமே அழகுதான்
இயங்குதலில் இன்பமிருக்கிறது
இயங்குதலில் உயிர்ப்பிருக்கிறது
இயங்குதலில் உற்சாகமிருக்கிறது
இயங்குதலில் நித்தியமிருக்கிறது
இயங்குதலில் வாழ்க்கையிருக்கிறது
இயங்கக் கற்றுக்கொள்ளுங்கள்
வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள்

உண்மையான கூட்டுழைப்பில்
கால்கள் எழுதும் கவிதை
கால்பந்தாட்டம்
உண்மையான கூட்டுழைப்பில்
கால்கள் மீட்டும் இசை
கால்பந்தாட்டம்
உண்மையான கூட்டுழைப்பில்
வீரர்கள் வரையும் ஓவியம்
கால்பந்தாட்டம்
பற்றியெரிய வேண்டுமென்றால்
பார்க்கத் தயாராகுங்கள்
படபடத்துப் பறக்க வேண்டுமென்றால்
பார்க்கத் தயாராகுங்கள்

திருவிழாக்கள்
மனிதர்களை உற்சாகப்படுத்துவதால்
எல்லோரோடும் சேர்ந்து
நாமும் உற்சாகமடைவோம்
திருவிழாக்கள்
மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவதால்
எல்லோரோடும் சேர்ந்து
நாமும் மகிழ்ச்சியடைவோம்
திருவிழாக்கள்
மனிதர்களை ஒன்றுசேர்ப்பதால்
எல்லோரோடும் விரைந்து
நாமும் ஒன்றுசேர்வோம்
நமக்காகத்தான் திருவிழாக்கள்
நமக்காகத்தான் விளையாட்டுக்கள்
நாம் விளையாடுவோம்
நாம் கொண்டாடுவோம்
இந்த
கால்பந்தாட்டத் திருவிழாவையும்
இந்த
வாழ்க்கையையும்

- ஜோசப் ராஜா

Pin It