*. என்னிடம்

சொல்வதற்கு
சொற்கள் தீர்ந்த
ஒரு தருணத்தில்
என்னிரு கைகளையும்
பற்றியெடுத்து
உன் நெஞ்சுக்குழியில்
வைத்துக் கொள்வாயா?

* .உடலில்
உறைந்திருக்கிற
ஒவ்வொரு ரேகைக்கோடும்
உன்னையே
நினைத்து ஓடிக்கொண்டிருப்பதை
ஒருவேளை உன்
நெஞ்சாங்குழிக் கேட்டு
நெகிழக்கூடும்.

*. என் கண்களைப்
பார்த்துக் கொண்டே
என் உள்ளங்கையை
அழுத்திப் பற்றுவாயா?
காதல் பேசும்
கண்களுக்கு
ஒருபோதும்
பொய்யுரைக்கத் தெரிவதேயில்லை!

*.உன் நெற்றியை
உன் கண்களை
உன் கன்னத்தை
முத்தமிடக் காத்திருக்கும்
உதடுகளின்
ஏக்கப் பெருமொழியை
எப்போதறியவிருக்கிறாய்?

*.ஆடி அடங்கிப் போகும்
வாழ்வின் முன்
அன்பில் அடங்கவே
பிரயத்தனங் கொள்கிறேன்.
இவ்வாழ்வை
வேதாளம் தூக்கியலைகிற
விக்ரமாதித்தனைப்
போல தூக்கியலைகிறேன்.

- இசைமலர்

Pin It