அத்தனை சலசலப்பிலும்
செத்தவளின் முகத்தில் 
மின்னுகிறது மூக்குத்தி

*

ஞானமடைந்த மரத்தையெல்லாம் 
கணக்கெடுங்கள்
புத்தனின் வழித்தடம் கிடைத்து விடும்

*

குழாயடி சண்டையில் 
பச்சை பச்சையாய் திட்டிக் கொள்ளும் 
பெண்களுக்கு பேச மட்டுமே வாய்த்திருக்கிறது

*

கல்லறைகளில் 
கம்பீரமாய் மேல் சாதி 
மண் அடுக்குகளில் 
கூனிக் குறுகி கீழ் சாதி 
செத்த பின்னும் புத்தி வரவில்லை

*

கண்டுக்காமல் வா
முள்காட்டு கழிப்பிடம்
முக்காடிட்டு அமர்ந்திருப்பது 
உன் கல்லூரி 
தேவதையாகவும் இருக்கலாம்....!

*

- கவிஜி

Pin It