அவநம்பிக்கையின் தேநீரை
சுவைத்து உறிஞ்சிக் கொண்டிருந்த
ஒரு மழை இரவில் தான்
கிரேட்டன் ஸ்ட்ரீட்டின்
86 எண் இலக்க அறைக்கதவை
அவன் தட்டி ஒலி செய்தான்
அது அருகிருந்த
பாஸ்டன் தேவாலயத்தின்
மணிகளோடு சேர்ந்து
அவளை தொந்தரவித்தது
அவள் கதவுகளை திறந்து
அவனை அழைத்துக் கொண்டாள்
அவன் ஒரு பெரும் பொதி ஒன்றை
சுமந்து கொண்டிருந்தான்
அதில் தனக்கான பரிசு பொருட்களை
அவன் கொண்டிருக்கக் கூடும்
என்று அவள் நம்பினாள்
மிச்சமிருந்த தேநீரை
எவ்வித முன்னறிப்புமின்றி
அவன் பருகத் தொடங்கினான்,
கிராம்பு நெடி கலந்த
அவனது சிகரெட் வாசம்
அறையெங்கும் நிரம்பியது
அப்போது
அவனை யாரென்று கேட்க
தோன்றவே இல்லை அவளுக்கு
எப்போதும் கூட,

அவன் வெளியேறி இருந்த
ஒரு பகலில்
அவனது அந்தரங்க பொதிகளை
அவள் பரிசோதித்தாள்
அதில் அவன் பல யுகங்களின்
டைரிக் குறிப்புகளை சேகரித்திருந்தான்
அதில்
சம்யுக்தா
கிளியோபாட்ரா
மெகருன்னிசா
அனார்
மும்தாஜ் பெயர்களில்
காதல் கொண்டாட்டங்களை
கவிதையாக்கி இருந்தான்
அதை தனக்கே தெரியாமல்
வாசித்தவள் தன் பெயர்
எங்காவது இருக்கிறதா என்று
தேடிப்பார்த்து களைப்படைந்தாள்

பிறிதொரு நாளில்
அவன் அவளுக்காகவும்
எழுதத் தொடங்கினான்
அவளுக்கு தான்தான்
சம்யுக்தா
தான்தான்
அனார் என்றும் புரிந்தது

சின்னச் சின்னதாய்
விளையாட்டாய்
கொடுமைகள் செய்தவன்
பிறகு மெல்ல வளர்த்து
அவள் மீது படர்த்திக் கொண்டான்

காண்போர் எல்லாம் பரிகசிக்கும்படி
அவள் காயங்கள் பெற்றாள்

பிறகு தான்
ஒரு இலையுதிர் கோடையின்
இரவொன்றில்
அவனை பிரிந்து விடுவதென்று
முடிவெடுத்தாள்

பிரியவும் துணிந்தாள்
ஆனால் துரதிஷ்டம்
அதற்கு முன்னே
அவன் பிரிந்து போயிருந்தான்
அதை மட்டும்
அவளால் ஏற்கவே முடியவில்லை

தான் தான்
அவனைப் பிரிய வேண்டும்
என்றும் அவன் ஒரு போதும்
தன்னை பிரிய முடியாது
என்றும் நினைத்துக் கொண்டவள்
நூற்றாண்டுகளாய்
அவனைத் தேடி அலைந்தாள்

கடைசியாக சுமேரியாவின்
மூன்றாம் நூற்றாண்டு
தேவாலயம் ஒன்றில்
அவனைக் கண்டடைந்தாள்

இன்னானா என்ற பெண்ணுக்காக
அவன் காதல் குறிப்புகளை
சேகரித்துக் கொண்டிருந்தான்

அருகில் சென்று
அவனை அணைத்துக் கொண்டாள்
அவன் வா இன்னானா என்று
அழைத்துக் கொண்டான்

அவன் தன் கையிலிருந்த
சிகரெட்டால் அவளைச் சுட்டான்
அவள் வலி பொறுக்க முடியாது
அவனை முத்தமிட்டால்

அவள் "கூடேயா"
என்று கத்திக் கொண்டே
மலை உச்சியை நோக்கி ஓடினாள்.
அவனும் இன்னானா நில் ஓடாதே
என்று துரத்தினான்

ஈப்லாவின் மலை உச்சியில்
திரண்ட மேகங்கள்
இருவரையும் நனைத்தது

இன்னானா என் அன்பே
உன்னை கொல்லாமல் விடமாட்டேன்
என்றபடியே டைபிரிஸ் நதியில்
அவன் குதித்தான்
"கூடேயா"என்று கத்தியபடியே
அவளும் குதித்தாள்

யூப்ரடீஸ் நதியும் டைப்ரிஷ் நதியும்
ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டன,
இன்னானா உன்னை

"கொல்லாமல் விடமாட்டேன்" என்ற குரல்
சுமேரியா மலைத்தொடர்களில்
ஒலித்து நிசப்தத்தில் அமிழ்ந்து
பின் மெல்ல கரைந்து போனது

- முருக தீட்சண்யா

Pin It