தவமியற்றும் தாய்மையின்
வெண் சங்கின் செவிவழி

அலைகளின் முத்த ஈரம்

சுவடுகளின்றி மணலில் உயிலெழுதும்
செவ்வந்தி வானத்தின்
கோணத்தை அளந்தபடி முத்துக்கள்

அங்கே தான் அறையப் பட்டிருக்கிறது
முன் எப்போதும் தோன்றியிராத
ஒளியின் நிழல் மிகப்பெரிய புதையலாய்

நிழலை இருள் என்பதா
வனம் வரைந்த தூரிகையின் சிறகில்
எட்டாம் நூற்றாண்டின் நீல வானம்

இன்னும் ஒளிர்த்தி விடைபெறும்
இருபத்திரண்டாம் நூற்றாண்டின்
வான் சமுத்திர அலைகளை
பூச்சிய இருளில் மூழ்கிச் சுடரும்

எங்கோ முளைத்த கீற்றுப் புனல்

அள்ளித் தெளிக்கிறேன்
அது பிரியங்களின் தேசமெங்கும்
பூவனங்களை வரைந்து முடிக்கிறது ஆதித்யா

 

00 

கண் உதிர்க்கும் சாம்பலை
அள்ளிச் செல்லும்
பிஞ்சுக் காற்றுப் போல
சுகப்படாத ஒரு மரணவலி
ஓர் அன்பின் வெற்றிடமாகா இருப்பிடம்
அனாதையாய் விகாரப்படுகிறேன்

ஒரு தூற்றலில் முகம் நீட்டும் அறுகம்புல் போல
காயங்களை உறங்க வைத்து
கூர் அரும்பென முளை கட்டுகிறது வேரறுந்த வெளி
தழுவலில்லாத பூங்கொத்துக் கரங்கள்
ஒரு போதும் விலங்கிடப் பட்டதில்லை
சிறைக்குள் அஞ்சுகிறேன்

சுவரில் மாட்டிய கடிகாரம் நிறுத்தப் பட்டிருக்கிறது
காலம் நகராமல் கிழிகிறது
தொடராத வேட்கைகளை விழிகள் நோக்குவதில்லை
சுடரும் தாரகைகளை வானத்தில் நட்டிருக்கிறாய்
மிக விருப்புற்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்

அச்சம் தணிக்கும் வார்த்தைகளை
நினைவுச் சின்னங்களாக நிரவி விட்டிருக்கிறாய்
மரணத்தின் பாதையில் வரிசையற்று
நெரிசலற்ற இடத்தை நீட்டியிருக்கிறாய்
துயிலற்று சலனப் படுகிறேன்

நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும்
திரையிடும் முகில்களை
ஏன் இன்னும் வரைந்து கொண்டிருக்கிறாய் ஆதித்யா

 

00 

மறுவடிவம் இல்லாத

பூத்த காதலில் மகரந்தம் சிதறி
தழுவும் மரணத்தில் மடிந்து உயிர் பெறு

நிறத்திற்குள் படிந்து வானவில் சிறகில்

மனதை இளைத்து வண்ணத்துப்பூச்சி செய்

இதயச் சிறையில் உன்னை மீட்டெடுக்க
தங்கக் கோடரியால் இடித்துத் தப்பிச் செல்

துள்ளும் வானத்தின் புகை மூட்டம் தவிர்த்து
மௌனத் துகள்களை தழுவி நழுவிக் கொல்

மூர்க்கத் தனமாய் முளைத்த வேர் முடிச்சில்
அன்பூற்றைப் பாய்ச்சி
வார்த்தைகளைக் கட்டிப் போடு

முலாம் பூசாத மாளிகைக்குள்
மூச்சிடுவதில் சங்கடமா .
எதிரொலிக்கும் குரலுக்கு கடிவாளமிடு

இப்போதே மடிந்து விடுகிறேன்
இப்போதும் துடித்துக் கொண்டிருக்கும்
உன் மென் இதயத்திற்காக ஆதித்யா.

 

00 

நிறை சூல் மேகத்தில்
நிலமளைந்து உலர்ந்து போகாத
வெண் திரள் முத்தங்கள்

நுனி துளிர்த்துக் காய்த்துப் பூக்கும்
இலை விளிம்பில் வடிகிறது
சூரியக் குருத்துகள்

மௌனமாக இறங்கும் மழையினூடே
பெரும் சலனத்தைப் பொழிந்து

பிரிந்து போகிறது ஒரு துளிக்காற்று

காற்றைப் பிடித்து வீசுகிறேன்
பற்றிப் பறக்கும் சிறகு விரித்தலில்
துயிலும் காலக்கிளை

மழைக்கு ஒதுங்கிய மரத்தினடியில்
மனசை நனைத்துவிட்டுப்
போகும் கடலாய் நீ

பிரிந்து விட மனமில்லா
மண்ணின் வாசம் கரைகிறது
ஓர் ஆற்றின் இறுகப் பற்றிய தழுவலில்

ஆதாமின் ஆப்பிள் கனிகளை

ஏவாளும் சுவைத்திராவிட்டால்
இத்தனை அழகாய் பூக்குமா இப்பூமி ஆதித்யா

 

00 

ஆயிரம் திரிகள் கொழுந்து விட்டெரியும்
கனல் வெளியில் அகல்கள் எண்ணெயில் வதங்க
மெல்லதிரும் இரத்தக் குடுவை.

உணர்வதில்லை எதுவும்
பனிப் புல்லையும் வேகும் பாறையையும்
மெது மெதுவாக தொட்டுப் பார்

விளைந்து பெருகும் காதல்
வாய்த்ததில்லை யாருக்கும்
பிரேமையற்றுப் புரிவதில் விதிமுறை உண்டா

மெல்லிய காற்றை
ஊதி ஊதித் தெளிந்து தானே
புல்லாங்குழல் உருகுகிறது
புரியாத இடத்தில் நைந்து நைந்து
அழுது தொலைகிறது

குலுங்கும் உயிர் கணம் ஒவ்வொன்றும்
உன்னை சுவாசிக்கும் உலராத நினைவுகளை
உலர்த்தி விடு ஒரே முறை
மொட்டுக்களை கருக்கி
தீய்ந்து போகிறேன் ஆதித்யா

 

00 

வனங்களின் பெரும் சிறையில்
ஒரு வாத்திய இசை
அழுத்தும் மனசை ரிதப்படுத்துகிறது

ஆத்மா எரிதலில்
உட் கருகும் சுவாச மணம்
எங்கிருந்தோ நுழைகிறது

மிரளும் மனதை
குளிர்த்தும் பனிப்பாறையின்
குருட்டுக் கண்களில் ஒளிப் படலம் விழுகிறது

வாழும் ரகசியமறியா
ஒரு ரச உணர்வை
பிழிந்து வழிய வழிய ஊற்றித் தீ மூட்டுகிறது

திராட்சை ரசத்தில்
ருசித்த இதழ்களை நனைத்து மீளும்

பானமென கணமும் தித்திக்கிறது

கரு நாகம் தீண்டிய
கண்ட விஷமெனினும்
மரணம் வரை சொட்டு சொட்டாய்
குடித்து மீள்கிறது

பலவீனமுற்ற இதயத்திலா
காதல் மகத்துவம் பெறுகிறது
தூய ஆன்மாவின் விழி வழி நுழைந்து
பரிணமிக்கும் மிளிர் கரு வைரமென ஆதித்யா. 

- தமிழ் உதயா, லண்டன்

Pin It