அடித்துக் கொண்டு அழும்
அதே வாய்
மூன்றாம் நாளில் கறி சோறு
தின்பதற்கு அடச்சீ
ஆயிரம் ஐதீகம்

ஊருக்காகவோ உனக்காகவோ
தின்று செரித்த
அன்றிரவும் வந்து நிரம்பும்
தூக்கத்தில்
பிணம் போல கணக்கும் வாழ்வு

செத்தவர் வரக்கூடாது என
கதவு நிலவில் அடிக்கும்
முனை மடிந்த ஆணியிலும்

வந்து குடித்துப் போக சொம்பு நீரை
போட்டோவுக்கு முன் வைக்கும்
அயோக்கியத் தனத்திலும்
தூவெனத் துப்பும் காரியக்காரணம்

சீ என இருக்கும் மரணத்தில்
அழுகைகள் அர்த்தமற்றவை
மரண வீட்டில் நான்காம் நாள்
வழக்கம் போல செயல்படும்

காக்காவுக்கு சோறு போடும்
உங்கள் மனுஷ தந்திரத்தை
தூக்கிப் போட்டு மிதிக்கும்
புலம்பிச் செல்லும் ஆன்மா

தானே செருப்பில் அடித்துக்
கொள்ளும்
மரணத்தின் நெடுந்தொடர்
வாரம் தாண்டுவதில்லை

- கவிஜி

Pin It