பரந்துவிரிந்த ஆகாயத்தின் வெளிச்சத்தை
எனதிரு கைகளால் மூடிமறைக்க முடியவில்லை
இன்னும் சற்றுநேரத்தில் மேவிடும்
காரிருள் எனினும்
இரவின் துணைக்காக காத்திருக்கிறேன்
நெடுமூச்செறிந்தபடி...

காலத்தைக் குறுக்க
நொடிகளை நூலில்கோர்த்து
மணிகளாய் மாலையிடுகிறேன்
உன் வருகைக்காக...

ஆற்றுநீரை அள்ளிப்பருகினாற்போல்
அங்குமிங்கும் அலைபாய்ந்து
வாழைக்குருத்தாய் வளைந்து நெளிந்து
வம்புகொள்கிறேன்
உன் அரவணைப்பிற்காக....

இருளும் பிணியும் என்னுளிரங்க
மனம் மகிழ்ந்து திசைகிழித்து
நனவிழி முழுக்க ஊடாடிச் செல்கிறேன்
உன் கனவுகளுக்காக...

தீராதாகம் தணிக்க
மழையில் நனையும் செங்காட்டுப்பூவாய்
உன்னுள் நான் திளைத்திருக்க
பின்னிருந்த இருட்கூட்டம்
என்னிலிருந்து நகர்ந்தோட
நெடுநெல்வாடையாய் காத்திருக்கிறேன்
மீண்டும் ஓர் இரவின் துணைக்காக...

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It