உள்ளிருந்து ஊரும்
பாம்பின் மினுமினுக்கை
காது கொடுத்துப் பார்க்கிறேன்
குடல் போல கொழகொழவென
சொட்டும் இன்னிசை கேட்கிறது
கண்களின் வழவழப்பில்
சிறு பிசுபிசுப்பு அற்புதம்
சுவர் நீளும் கைகள் நீட்சியென
மார்பு திமிறிய அட்டைப்படம்
புடைக்க உடைகிறது தேகம்
எழுத்துக்களால் ஆகிறது மிச்சம்
அச்சப்பட ஏதுவாக எவன் வீட்டுக் கதவும்
எனக்கே திறக்கிறது
குருதி கசியும் எல்லா ஓட்டைகளின்
வழியேயும் சிலை பேசும்
ஆலாபனை நிகழ்கிறது
மொழி புரியா சங்கேதங்கள்
தலைகீழ் விதி நெய்கிறது
திசை அறியா சிறகொடைத்த
மொட்டை பறவைக் கூட்டம் கால்
கொத்தி கொக்காகிறது
113ம் பக்கம் திரும்புகையில்
படித்தவனைக் காணவில்லை
யாராவது அடையாளமிட்டுப் போங்கள்
விட்டால் மறைந்து விடுமாம் பக்கம்
மூடிய பின்னும் உளறிக்
கொண்டிருந்த புத்தகத்துள்
பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டேன்
இனி படித்தவன் பாடு
இனி படிப்பவன் பாடு...!

- கவிஜி

Pin It