இந்த அன்பு ஏன்
இத்துணை போதையாயிருக்கிறது!

இந்த அன்பு ஏன்
இத்துணை வாதையாயிருக்கிறது!

இந்த அன்பு ஏன்
ஒருபோதும் போதுமானதாய் இருப்பதேயில்லை!

இந்த அன்பின் கலம் ஏன்
ஒரு போதும் நிறைவதேயில்லை!

இந்த அன்பு ஏன்
இத்துணை வசீகரமாய் இருக்கிறது!

இந்த அன்பு ஏன்
தேவர் கழுத்து மாலையென வாடுவதேயில்லை!

இந்த அன்பு ஏன்
இப்படி அலைக்கழிக்கிறது!

இந்த அன்பு ஏன்
இப்படி ஆசுவாசமாயிருக்கிறது!

இந்த அன்பு ஏன்
அலைகடலென சதா ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது!

இந்த அன்பு ஏன்
வழிப்போக்கனின் பெருஞ்சுமையை
இறக்கி வைக்க காத்துக்கிடக்கிற
சுமைதாங்கி கல்லென இருக்கிறது!

இந்த அன்பு ஏன் உனைக்கண்டதும்
பாசப்பெருங்காடென பற்றியெரிகிறது!

- இசைமலர்

Pin It