நகர நடுவில் மேம்பாலத்தினடியில்
ஒரு புலி இளைப்பாறிக்
கொண்டிருக்கிறது
அந்த சிலையின் பின்புறம்
ஒரு யானை நீர் குடித்துக்
கொண்டிருக்கிறது
இடப்பக்கம் பிரியும் சாலையில்
ஒரு நீரோடை நீந்திக்
கொண்டிருக்கிறது
சிக்னலுக்கு சற்று முந்தியே
சில மான்கள்
ஓவியம் களைத்துக் கொண்டிருந்தன

கண்கள் சிமிட்டி காட்சியைக் கலைத்த
பட்டாம் பூச்சி பூர்வ ஜென்ம
நினைவைப் பகிர
30 மைல்கள் பயணித்து
ஆனைக்கட்டியிலிருந்து
வந்திருந்தது

டிராபிக் போலீஸ் இருவர்
விசாரிக்கையில்
காலத்தை நிறுத்திக் கூறியது
"அங்குதான் இப்போது காடு இருக்கிறது"

வயது முதிர்ந்த டிவிஎஸ்காரர் ஒருவர்
முணுமுணுத்துப் போகிறார்
"அங்கயாவது இருக்குதே.....!"

- கவிஜி

Pin It