ஒருவர் துணி துவைக்க
ஒருவர் காய் நறுக்குகிறார்
ஒருவர் நீர் பிடிக்க
ஒருவர் வீடு கூட்டுகிறார்

சாதம் செய்பவர்
சற்று ஓய்வெடுக்க
இன்னொருவர்
சாம்பார் வைத்து
அவியலும் செய்கிறார்

இருவருமே வேலைக்கு
செல்கிறார்கள்

பகல் பொழுதில்
இருமுறை
அலை பேசுகிறார்கள்

சண்டையில்லை
தன்முனைப்பு இல்லை
ஒருவருக்கு தாடி நடிகர்
ஒருவருக்கு
மீசையில்லாத நடிகர் பிடிக்கிறது

பயணங்களில்
மாற்றி மாற்றி வண்டி ஓட்டுகிறார்கள்
அவரவருக்கு
பிடித்த ஆடை அணிகிறார்கள்

உன் பேச்சு என் பேச்சு இல்லை
நம் பேச்சு மட்டுமே

தாலி இல்லை தவம் இல்லை
யார் பெரியவர்
என்ற மூடம் இல்லை

பக்கத்து வீடு மட்டும்
முகம் சுழித்துக் கொண்டே
ஜன்னல் ஒட்டி காது கேட்கிறது

சந்தேகம்
அவர்களில் மனைவியாக
எவன் இருப்பான்
என்பதில் தொடங்கி
ஏராளம்....அவர்களுக்கு...!

- கவிஜி

Pin It