வாயிற்கதவுகளை விசாலமாக
திறந்து வைத்தும்
என் பகற்பொழுதுகளில் வந்திடாத நீ
ஏன் இரவுப் பொழுதுகளில்
பூட்டிய சன்னல்களின்
கண்ணாடிக் கதவுகளைில் முட்டி
தடதடத்துப் போகிறாய்.

பகற்பொழுதுகளில் உலவிடாதவண்ணம்
இடைக்கால தடையேதும் விதிக்கப்பட்டதா சொல்.

மெல்லிய நெல்மணிகளைப் போன்று
ஒருசேர வீழும் மழைத்துளிகளையும் தான்
நீ அலைக்கழித்து சிதறடிக்கிறாய்.

விடுதலை பெற்ற நெடுங்கால சிறைவாசி போல
சில நேரங்களில் தழுவிக்கொண்ட நீ
இன்று கைவிலங்கை உடைத்து
தப்பியதொரு கள்வனைப்போல
எம் குடில்களில் கூரைகளைப் பிய்த்து எறிவது ஏனோ !

கீழ்வானின் அடிப்பகுதியில்
ஒரு மின்மினி புலப்படுகிறது.
அது மெல்லெழுந்து
மேல்வானில் தம் செங்கதிர்களை
அகலவிரிக்கும் வரையில்
உன் பெருங்கூத்து அரங்கேறட்டும்
எம் வீதிகள் தோறும்..

- எஸ்.ஹஸீனா பேகம்

Pin It