ஊருக்கு வந்துவிட்டு
அம்மா போனபிறகு
பொசுக்கென்று கிடக்கிறது
குடியிருக்கும் வீடு.

கீச்சுக் குரலெடுத்து
குதூகலித்த மழலைகள்
உடன் போவதென
உருண்டு பிரண்டு அடம்பிடித்து
சுருண்டு கிடக்கின்றனர்
அவரவர் படுக்கையில்.

அவளது தொடுகையில்
விழுந்தெழுந்த அடுப்படிச் சாமான்கள்
மென்சோகக் கீற்றுகளை
மௌனமாய் ஒலிபரப்புகின்றன.

வீட்டின் பக்கச் சுவர்களில்
முட்டி மோதி எதிரொலித்த
அவளின்
வெற்றிலைக்கறைச் சொற்களை
மென்றெடுத்த என் செவிகள்
காவிக் கதறலை உமிழ்கின்றன.

வாசல்படி தாண்டித் திரும்புகையில்
அவள் விழிகள் அனிச்சையாய் துளிக் கண்ணீரை
பொலபொலவென உதிர்த்தன.

அதென்னமோ தெரியவில்லை
இடுப்பளவு நீளத்திற்கு
பின்னித் தொங்கவிட்ட
அம்மாவின் சவுரிமுடி மட்டும்
எங்களைப் பார்த்துப் பார்த்துச்
சிரித்து சிரித்து
அப்படி
நாட்டியமாடிக்கொண்டு போகிறது.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It