கையெடுத்துக் கும்பிட்டவனைக் காணவில்லை
கால் கடுக்க காத்திருந்து வாய் கிழிய பேசியவனை
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
திறந்த வண்டியில் வெள்ளையும் சொள்ளையுமாக
முகமேந்தி வந்த கூட்டத்தை
கண்டு பிடிக்கவே முடியவில்லை
காசு கொடுத்தவன் கொடுக்க வந்தவன்
இடைத்தரகன் ஒருவனைப் பற்றியும் துப்பில்லை
கையை காட்டியவன் விரலைக் காட்டியவன்
ட்ரம்மைக் காட்டியவன் பூவைக் காட்டியவன்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு பயலும் இல்லவே இல்லை
வீதி பிளந்து குழாய் போட்டு போட்டது போட்டபடியே
போனது ஒரு கூட்டம்
இந்த பக்கம் 30 வீடு அந்த பக்கம் 40 வீடு
புதருக்குள் பன்றிகளைப் போல தினமும்
வாயற்று கால் தின்கிறது
அள்ளவும் முடியாத சொல்லவும் இயலாத
மண் குவியல்கள் மத்தியில் எங்கள் வீதியில்
60க்கும் மேற்பட்ட படித்த பிணங்கள்
என்னையும் சேர்த்து...

சேற்றால் அடிக்கும் இவ்வாழ்வின் மத்தியில்
இந்த மழை வேறு......

- கவிஜி

Pin It