குதிரையொன்றின் கடிவாளங்களுக்குள் கொஞ்சம்..
ஒரு சிப்பாயின்
கழுத்துப் பகுதிக்குள் கொஞ்சமென
புகுந்து கொண்டு
ஒரு புள்ளி போல்
மறைந்து கொண்டிருந்தன
சதுரங்கத்தின் அத்தனை சதுரங்களும்...

அவற்றுள்
நான்கு கருப்புச் சதுரங்கள் மட்டும்
எங்கும் புகுந்து கொள்ளாமல்
இன்னும் மிதந்து கொண்டிருக்கின்றன..

காட்டுப்பாதையின் தண்டவாளத்தில்
முன்பு கடந்து சென்ற ரயிலை
மூச்சிறைக்கத்
துரத்திக் கொண்டோடிய
காட்டு நாய் இன்னும்
ரயிலை எட்டியிருக்கவில்லை..

அதன் பின்னால் தண்டவாளத்தில்
வந்துகொண்டிருந்த
அடுத்த ரயிலையும்
அது கவனித்திருக்கவில்லை..

கொஞ்சம் கொஞ்சமாய்
விரிசல் விட்டுக் கொண்டேயிருந்த
பாறையொன்றில் இறுதியாய்
சின்னச் செடி ஒன்று
இன்று துளிர்த்து விட்டது..

முன்பெப்போதோ
கூட்டத்திலிருந்து தொலைந்துபோன
ஆடொன்று அதனை இப்போது
மேய்ந்து கொண்டிருக்கிறது..

அணைந்து போயிருக்க வேண்டிய
நேரத்துக்கு முன்பாகவே
உருகிப் போயிருந்த
மெழுகுவர்த்தி ஒன்றுக்குள்
இன்னும் மீதமிருக்கிறது
பெரு நெருப்பு..
அருகிலேயே ஒரு காடு ....

- கிருத்திகா தாஸ்

Pin It