ஏதொரு இயக்கமும்
இல்லாத பொழுதொன்றின்
சோம்பலை வெறித்தபடி
அமர்ந்திருக்கிறது இயலாமை.
போதிய நேரங்களில்
எதிர்பார்த்துக் காத்திருந்த
பொழுதுகளின் அத்துமீறல்கள்
எதுவும் நினைவில் இல்லை.
இது கற்பனை மட்டுமா
அல்லது எதிர்பார்ப்பா
அல்லது நாடகத்தனமா.
தெரியவில்லை.
மீதமிருக்கும் எதனைக்கொண்டும்
வேறெதையும் நிரப்பிக் கொண்டிருக்க
மனமில்லை..
காலியானவை
காலியானவையாகவே இருக்கட்டும்.
எழுத்துப்பிழைகளைத்
திருத்தம் செய்யப்போவதில்லை.
அவை அப்படியே
கோணல்மானலென
இருந்துவிட்டுப் போகட்டும்.
தனக்குத்தானே தன்னைச்சுற்றி
ஒரு சதுரத்தையோ
அல்லது செவ்வகத்தையோ
வரைந்துகொண்டுவிட்டு
தேமேவென்று அமர்ந்திருக்கும்
அந்த வார்த்தைக்கு
நேரமும் நொடியும்
யார் காட்டிக்கொடுப்பார்.
வார்த்தைகளைக் குரல்களிலிருந்து
பிரித்தெடுத்து அலையச்செய்யுமாறு
செயலொன்று இருப்பின்
எத்தனை வார்த்தைங்களைத்
தாண்டி தாண்டிச் செல்வது
சாலையெங்கும் தெருவெங்கும்.
எப்படி பேருந்துகள் இயங்கும்.
எப்படி நடந்து செல்வது.
பச்சை வண்ணத்துக்கு
என்ன செய்யும் அந்த வார்த்தைகள்.
சிகப்பு வண்ணத்துக்கு
மதிப்புக் கொடுக்குமா அவைகள்.
தீயதைப் பார்க்காதே என்ற
அந்த வார்த்தைக்கு
தான் என்ன அர்த்தத்தை
சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்
என்று தெரிந்து இருக்குமா.
எதுவுமே எதற்குமே தெரியாதென்றால்
எதுவும் எதற்கெனவும் தேவையில்லை.
எதுவும் எதற்கும் இல்லையென்றால்
எள்ளளவும் இயக்கமில்லை.
இயக்கமில்லாத ஒன்றின்
சாயல் கூட எதிலுமிருப்பதில்லை.
மீண்டும் மீண்டும் இந்த
எழுத்துப்பிழைகளை வைத்துக்கொண்டு
நான் என்ன செய்வது.
நான் என்பதற்கு அர்த்தம் கூட
எனக்கு விளங்கவில்லை.
அதன் அர்த்தத்தை கண்டுபிடித்து
நான் என்னதான் செய்யப்போகிறேன்.
அதுவும் தெரியாது எனக்கு.
அர்த்தம் என்பது வார்த்தை அல்லவே
அது ஒரு ஒலிதானே.
ஒலிக்கு எதற்கு அர்த்தம்.
பாவனைகள்தானே தேவை ஒலிக்கு.
அர்த்தங்கள் எதற்கு.
அப்போது சாலை முழுக்க
சிந்தி சிதறிக்கிடப்பது
வார்த்தைகள் அல்ல. ஒலிகள்.
அவற்றுக்கு தேவையான பாவனைகள்.
பாவனைகள் ஒப்பனை செய்துகொண்டு
வந்தால் அவற்றை
தனக்கானது தான் என்று
அந்த வார்த்தைகளுக்கு
அடையாளம் தெரியுமா.
தெரியாவிட்டால்
தனக்கான பாவனையை
அந்த வார்த்தைகள்
எவ்வாறு தேர்வு செய்துகொள்ளும்.
ஒரு வேளை
ஒலிக்கும் பாவனைக்கும்
பொருந்தாத ஜோடி ஒன்று
உருவாகிவிட்டால் என்ன செய்வது.
ஆம்.. என்ன செய்வது..
மிகச் சுலபமான வழி
ஒன்று உள்ளது..
ஆம்..
மிகச் சுலபமான வழி..
அவற்றுக்கான பாதையை
அவை தேர்ந்தெடுத்துக்கொண்டு
சென்று விடட்டும்..நான்
எதிர்த் திசையில் அமர்ந்து
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விடுகிறேன்..

- கிருத்திகா தாஸ்

Pin It