இரட்டை ஜடையில்
குதித்தோடினாய்...
சைக்கிள் பழகி
விழுந்தழுதாய்...
தாவணி போட்ட பின்னும்
பழக்க தோஷத்தில்
மார்குலுங்க ஓடிவந்தாய்...
புடவை கட்டி
நடக்க மறந்து நடந்தாய்...
திருமணம் முடிந்து
கண் பிதுங்கி சென்றாய்..
பிள்ளை பெற வந்து
உடல் பருத்து நீண்டநாள்
கழித்து போனாய்...
காரணமற்ற பொழுதோடு
முகம் வீங்கி திரும்பி வந்தாய்...
வீதி மறந்து வீடடைந்தே
வெறிச்சோடிக் கிடந்தாய்...
பேசா மொழியோடு
கோபம் கலந்தே வாழ்ந்தாய்...
நரைகூடி நடுப்பருவத்திலேயே
நடுவீதி ஞாபகமென நின்றாய்...
ஊர் கண்கள் தாண்டி
ஊன் கண்கள் வேண்டி
காலம் கடத்தி கிடந்தாய்...
காலம் நின்ற அதிகாலை
ஒன்றில் அதிதீவிர
மௌனமென
கருப்பு வெள்ளை பூக்களோடு
பிணமாகி கடந்தாய்...

எல்லாவற்றையும் எப்போதும்
பார்த்துக் கொண்டிருந்த
நம் வீதி
உன் சித்திரக் கதவடைத்தும்
வெறிக்க பார்த்துக்
கொண்டிருந்தது மொத்த
ஞாபகமென ....

- கவிஜி

Pin It