சுற்றுச் சூழலும் புவிவெப்ப உயர்வும்
உற்ற உலகை அழிவுப் பாதையில்
துரத்திச் செல்வதைத் தடுக்க முதலியை
நிரந்தர மாக ஒழித்துச் சமதர்ம
முறையை ஏற்பதே ஒரேவழி யென்று
அறைந்து கூறினும் கேளா திருந்தால்
நல்வழி கூறுவோர் தோன்றவே மாட்டார்
இல்லை கேட்போர் என்பதால் அல்ல
உயிரினம் யாவும் அழிவதி னாலே

(சுற்றுச் சூழலும் புவி வெப்ப உயர்வும் நாம் வாழும் உலகை அழிவுப் பாதையில் துரத்திச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றால் (புவி வெப்ப உயர்வை அதிகரிக்கும் பொருட்களே அதிக இலாபத்தைக் கொடுக்கின்றன என்று அவற்றை உற்பத்தி செய்யும்படி கட்டாயப்படுத்துவதும், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் செலவினங்கள் அதிகரித்து, இலாப விகிதம் குறைகிறது என்பதற்காக அவற்றைத் தவிர்க்க ஊக்குவிப்பதுமான) முதலாளித்துவ முறையை நிரந்தரமாக ஒழித்து, (மக்களின் நலனையே கருத்தில் கொள்வதால் புவி வெப்ப உயர்வுப் பொருள்களின் உற்பத்தியைத் நிறுத்தவும், புவியைக் குளிரச் செய்யும் மரம் வளர்த்தல் போன்றவற்றை ஊக்குவிக்கச் செய்யவுமான குணத்தைக் கொண்ட) சோஷலிச அமைப்பை ஏற்பது ஒன்று தான் வழி என்று அறிவியல் வழியில் உறுதியாகக் கூறிய போதும், அதைக் கேளாது இருந்தால், அதன் பின், நல்வழி கூறும் அறிஞர்கள் தோன்றவே மாட்டார்கள்; அறிஞர்களுக்கு மரியாதை இல்லை என்ற காரணத்தினால் தோன்ற மாட்டார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், உயிரினங்களே அழிந்து போகும் நிலை ஏற்பட்டு விடும் என்ற காரணம் அதைவிட முன்னே நிற்கிறது.)

- இராமியா

Pin It