திறக்காத காட்சிக்குள்
தட்டும் கைகளால்
அது திறந்து கொண்டே
மூடிக் கொள்கிறது...

மாய மணிகளை
மடை திறக்கும்போது
வந்தமிழும் பொங்குதல்
ததும்புதலின் தாகமாகிறது...

செய்தவை நினைத்தவை
வந்தவை போனவை
கோடுகளற்ற தாக்கத்தை
வரைந்தே அழிகிறது...

பேரழுகைக் கனவுகளை
சிரிக்க சொன்ன
தான் எழுதிய விதி கொண்டு
மெல்ல விசும்புகிறது...

பிரிந்த வானத்துள்
பிறழ்ந்த வர்ணங்களை
கண்மூடி கடந்த காலமாய்
அது நிறைகிறது...

யாசித்தவைகளை
யோசனை செய்த
பிறிதொரு உடைதலில்
மீண்டும் மௌனமாகிறது...

ஆயினும் அற்புதக்
கடத்தல்களை இருபுறம்
செய்த சாலையை
மூளை கொய்கிறது...

மனமென்னும் உளி செய்த
மானுட சவ்வூடு,
கரைந்து விடிந்த
கிழக்காய் மகரந்தமாகிறது....

உடைபட்ட பிறகும்
உறுதிபடத் தேவையெனில்
உள்ளூர சுரப்பது
உண்மைக்கு நிகராகிறது...

எது எப்படியோ
வந்து நின்று கதவு தட்டும்
புது வருடத்தை
மெல்ல மெல்ல திறக்கத்தான்
வேண்டியிருக்கிறது....

- கவிஜி

Pin It