கோடிக் கணக்கில் மக்கள் பசியால்
வாடிக் கிடப்பதைக் கண்டும் உலகில்
உணவு உற்பத்தி செய்யும் தொழிலில்
பணத்தைப் போட மறுப்ப தேனோ?
மிகுதியாய்த் தானியம் வீணான போதிலும்
பகுத்து அவற்றை இல்லோர்க் களிக்க
இந்திய அரசு மறுப்ப தேனோ?
சந்தையின் விதிகளே காரணம் அறிவீர்
இத்தகைக் கொடுமை ஒழிந்து மனிதன்
எத்திசைச் செலினும் சோறு கிடைக்க
உத்தம வழியது சமதர்மம் ஒன்றே

(உலகில்) கோடிக் கணக்கான மக்கள் பசியால் வாடிக் கொண்டு இருப்பதைக் கண்டும், உணவு உற்பத்தித் தெழிலில் பணத்தை முதலீடு செய்ய (முதலாளிகள்) மறுப்பது ஏன்? உணவு தானியங்கள் (கிடங்குகளில்) மிகுதியாகக் கொட்டிக் கிடந்தாலும் (அவை எலிகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் விருந்தாவதைத் தடுத்து, ஏழை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும்) அவற்றை ஏழைகளுக்கு அளிக்க இந்திய அரசு மறுப்பது ஏன்? முதலீட்டுக்கு அதிக இலாபம் கிடைக்கும் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று வற்புறுத்தும் சந்தை விதிகள் அப்படிச் செய்வதைத் தடுப்பது தான் காரணம் என்பதை அறிவீர்களாக. (மனித சமூக நிர்வாகத்திற்கு எதிரான அத்தகைய சந்தை விதிகளை ஒழித்து) எத்திசையில் சென்றாலும் (அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடு இன்றி) சோறு கிடைக்கும் உயர்வான வழியை அளிப்பது சோஷலிசம் ஒன்றே என்பதையும் அறிவீர்களாக.

- இராமியா

Pin It