கீற்றில் தேட...

desert 240நிலத்தின் மெளனங்கள் பற்றி
இரவும் பகலும்
நிறைய பதிப்புகளை வெளியிட்டு விட்டது
அதன் பிரசவம் குறித்து
நிறைய மேடைகளில் பேசப்பட்டுவிட்டன
அதன் பொறுமை கருணை குறித்து
குழந்தைகளுக்கு
சொல்லிக் கொண்டு தானிருக்கின்றோம்
குழந்தையாக இருக்கும் போது
தொட்டிலாகும் நிலம்
வளரும் போது நண்பனாகிறது
காதலிக்கும் போது
பூக்கள் தந்து வாழ்த்துகிறது
பசிக்கும் போது கனிகளையும்
தானியங்களையும் தருகிறது
முதுமையில் அனுபவங்களை கேட்கிறது
இறந்த பின் அணைத்துக் கொள்கிறது
எல்லாவற்றிலும்
மெளனத்தின் அங்கமாக இருக்கும் நிலம்
நிலத்தின்
வலிமையான வார்த்தைகள் எது தெரியுமா
பாறைகள்
எளிய வார்த்தைகள்
தண்ணீர்
கருணை வார்த்தைகள்
தாவரங்கள்
அடக்கிவைக்கப்பட்ட வார்த்தைகள்
எரிமலை
கோப வார்த்தைகள்
சூறாவளி
காதல் வார்த்தைகள்
மழை
நிலத்தைப் பற்றி பாடமல்
மாயைகளை பற்றி பாடுகின்றோம்
நிலம் பாதைகளை திறந்து வைத்திருக்கிறது
அதன் பாதையில் நடந்தால்
யாரும் வழி தவறிப் போக முடியாது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.