lady 269கீழுதடு மடித்துக் காத்திருக்கிறாள்
நிரம்பித் தளும்பும் கண்களில்
பதிய மறுக்கிறது நகரும் பிம்பங்கள்

ஸ்ட்ரெச்சரின் சக்கர உருளைகள்
நினைவை இழுக்கின்றன

'இரு..' - என்பதாக
உள்ளங்கை அழுத்திப் போனவனின்
வெப்பச் சூட்டில்
அதிகமாய் வியர்க்கிறது

மருந்தின் நெடியை மீறுகிறது
நோயின் வாசனை

பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவனின்
புதிரை
மடியில் கிடத்தி வைத்திருக்கிறாள்

வெளியே வானம் இருளக்கூடும்
எல்லோரிடமும் குடைகள் உண்டு

யாராவது
ஒரு டீ குடிக்க அழைக்க மாட்டார்களா
என நெஞ்சு விம்முகிறது

யாராவது
யாராவது

-- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It