கடைசிப் பேருந்தின் விளக்கொளி
மரங்களைக் கடந்து மேலேறும்
காலம் காலமாய் அக் காட்டுள் மரித்த
முது விலங்குகளின் உரு செதுக்கியபடி ..
‘க்ஊப் க்ஊப் க்ஊப்” ஒலியெழுப்பி
பாதுகாப்பை அறிவிக்கிறது தனிக்
கருங்குரங்கு ...
காடொரு பெருஞ்சிறுமியாய்
தண்ணீர்ச் சலங்கையொலிக்கும்
குற்றோடையில்
குட்டியோடு நீரருந்தி நிமிரும் கடமானின் கண்களுக்குள்
எரிந்தடங்கும் விண்கல் ...
துணையென கைவிளக்கும் சிறுகோலும்
நாயும் கொண்டு ஆளற்ற வழியில்
விரைகிறான் தம்பி
தொலை தூர நகரில் பள்ளி முடிந்து திரும்பும் அக்காவை அழைத்து வர ....
செல்லமாய்க் குரைக்கும் நாய்க் குரல் கேட்டு
வீட்டிற்குள் குளிர் போர்த்திய போர்வை விலக்கி
பெருந்தெய்வங்களை வணங்கி நன்றி சொல்கிறாள்
பெரு மூதாய்...
பெரு மகிழ்வின் ஒளியேற்றுகிறது
பெண் குழந்தைகள் வீடு திரும்பும்
இருள் மாலைப்பொழுது   

- த.விஜயராஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It