தெரு நாய்களின் சலனத்தையும் குணத்தையும் ஒத்த
மனித ஆண் மிருகங்கள் சில
பெண்ணின் வாசம் தேடி தின‌வெடுத்து
சாதி எச்சிலை உமிழ்ந்தபடி
சாதிப்புணர்தலை நிகழ்த்திக் காட்ட தயாராகவேயிருக்கிறது
இறைச்சிக்காய் காத்திருக்கும் முதலையைப் போல

அச்சம் மடம் நாணம் கொண்டு
புழுவாய் வளைந்து நெளிந்து
வாழ்ந்து போவென்கிறது ஒரு கூட்டம்
அச்சத்தையும் அசிங்கத்தையும் எத்தருணத்திலும்
பெண்ணுடலில் புகுத்திடத் துடிக்கிறது
மற்றுமொரு கூட்டம்

பெண்ணாய் பிறந்த காரணத்தினாலேயே
கருப்பை சுமக்க வேண்டிய கட்டாயத்தையும்
அதன் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்தையும்
வாழ்நாள் முழுக்க சுமையாய் இற‌க்குகிறது

சமத்துவமும் சுதந்திரமும் சட்டத்தின் வழியே
பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும்
பாதுகாப்பு என்னவோ மென்று விழுங்கும்
ஓநாய்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது

இந்த ஆண்மகன் இந்த உறவென
இந்த உறவிற்கு இந்தெந்த உரிமைகளென
இட்டுவைத்த ஆணியச் சட்டங்கள் தேவையெனில்
திருத்தியெழுதவும் மாற்றியமைக்கவும்
தன்முனைப்போடு காத்திருக்கிறது

உறவின் பெயர்கள் பலவாயிருந்தாலும்
வல்லுறவின் பாதிப்பென்னவோ
ஒன்றாகத்தான் நிலைகொள்கிறது

தந்தையே மகளைப் புணர்வதும்
அண்ணனே தங்கையை தாரமாக்குவதும்
தரணிமுழுதும் ஆணாதிக்கத்தின் நியாயங்களாயிருக்கிறது

ஆதிகாமத்தை ஆணாதிக்கம் சுமந்து கொள்கிறதென்றால்
மீதிகாமத்தை சாதியாதிக்கம் கையிலெடுத்துப் போகிறது

அடிமையின் வரலாற்றை மறுதலித்து, புறக்கணித்து
அறுத்தெறிந்து எனக்கான வெளிதேடி
எனதியல்போடு நகர்ந்து செல்ல
நான் நானாக வாழ்ந்து போக
எனக்குத் தேவையாயிருக்கிறது
கருப்பையில்லாத ஓருடல்
ஆணாதிக்கம் ஊடுருவாத புது உடல்
இனியும் வலிகளை வலிந்து சுமக்க
என்னை நிர்பந்திக்காத தனியுடல்

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It