பரிசளிக்கும் போதே எந்த காலத்திலும் செல்லுபடியாகும்
நாணயமொன்றை அதில் போட்டிருந்தாள்
ஆதி நாட்களில் நாணயத்தின் சத்தம் சந்தோசமாகயிருந்தது
அதை செலவளிக்கக் கூடாதெனும் வைராக்கியமிருந்தது
உண்டியலின் மீது எப்போதும் ஒரு கவர்ச்சி
இருந்து கொண்டேயிருந்தது
அதற்குப் பிறகு அதற்குள் போட
எதுவுமில்லாததால் ஒரு கனவைப் போட்டேன்
அம்மா கடவுள் பொம்மையைக் கொடுத்தாள்
அதையும் அந்த உண்டியலில் போட்டுவிட்டேன்
பிடித்த தோழியின் பெயரை எழுதிப் போட்டேன்
அந்தப் பெயர் ஒரு பூவைக் கேட்டது; பறித்துப் போட்டேன்
காலம் ஒவ்வொரு வருடத்தையும் என்னிடமிருந்து பிடுங்கிப் போட்டது
என் வயதை தின்று வளர்ந்த அந்தப் பெயர்
நிழலைக் கேட்டது; ஒரு மரத்தை அனுப்பினேன்
இருட்டைப் பார்க்க ஒரு நிலவைக் கேட்டது
ராத்திரி வானத்தை அனுப்பினேன்
உன்னுடைய உயிர் இங்கிருக்கிறது
வெளியே என்ன செய்கிறாய் நீயும் வாவென்றது
உள்ளே நுழைய தாமதமானது
ஒரு நாள் திரும்பி வந்து பார்த்தபோது
உடைந்து கிடந்தது உண்டியல்
அந்தப் பெயர் ஒரு பறவையாகி பறந்து கொண்டிருக்கிறது.
என் சன்னலுக்கு வெளியே.

Pin It