வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி
எள்ளுவோர் உழைப்பைக் காணும் பொழுதெலாம்
கொடுமை எதிர்ப்பும் விடுதலை உணர்வும்
சடுதியில் வருவது இயல்பே அன்றோ
பழங்குடி மக்களின் வாழும் உரிமையைச்
சுழற்றும் சந்தையைக் காப்பதற் காகப்
பறித்திட முயல்கையில் மறிப்பது தவறோ
அறிஞர் குழாமும் வினைஞர் கூட்டமும்
அமைதியைக் காத்து அழிய விட்டால்
குமைவீர் நாளை உமைச்சுடும் போது

(பழமரம் நாடிச் செல்வன பறவை இனம். அது போல உழைப்பை மதியாதவர்களைக் காணும் பொழுது அக்கொடுமையை எதிர்க்க வேண்டும் என்ற விடுதலை உணர்வு உடனே தோன்றுவது இயல்பு. (பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு, மூலதனத்தை எங்கு ஈடுபடுத்துவது என்று வழி தெரியாமல்) அலைக்கழித்துக் கொண்டு இருக்கும் சந்தைப் பொருளாதார முறையைக் காப்பதற்காக, (சுரங்கத் தொழில், நீர் மேலாண்மை என்ற பெயர்களில் திட்டங்களைப் போட்டு) பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்க  முயலும்போது, அதைத் தடுத்து மறிப்பது தவறில்லையே?  அறிஞர் குழாமும் உழைக்கும் கூட்டமும்  இப்பாழுது அமைதியாக இருந்து விட்டு, பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைக் காக்க முயலாமல் அழிய விட்டால், எதிர் காலத்தில் அவர்களையும் இவை போன்ற பிரச்சினைகள் சுடும் பொழுது (மனம்) குமைய வேண்டி இருக்கும்.)

- இராமியா

Pin It