இன்னுமொரு இடைவெளி
 
தேடலுக்கான என் விருப்பத்தை
சொன்னதொரு நாளில்
அதை எதிர்கொண்ட ஒரு
இசைவும் உன்னில்
பிரதிபலிக்கவில்லை.
 
தேர்ந்த நடிகர்களைப் போல
ஒவ்வொரு நாளையும்
நடித்துக் கொண்டிருக்கிறோம்.
 
நீண்ட தேடலுக்குப் பின்
அவசியமாய் இருக்கிறது-ஒரு
இடைவெளி.
 
இதழ் மாற்றிக் கொள்ள தேனீரும்
கொஞ்சம் கேக்குகளும்.....
நகர்கிறது பின்னிரவு அடுத்தடுத்த
தேடலுக்கான (முனைவுடன்) முனைப்புடன்.....
 
நீயும்  நானும் தொலைத்ததை
தேடும்.....
முடிவின்றி நீளும் இந்த
நடுநிசியிலும் தேவை.....
இன்னுமொரு இடைவெளி......!

 
நேர்த்திப் பிழை

எழுத்துப் பிழையால் நிரம்பி
வழிகிறது கவிதை.
திருத்திட நேரமின்றி
பிழையோடே  இரு என்றேன்!
 
பகர்வதன் பொருளை யாருமே
சரியாய் புரிந்து கொள்ளும்படி
அபூர்வமாய் இருக்கிறது
நேர்த்தியான பிழைகளுடன் அது!

      - ராஜிபத்மநாபன்

Pin It