பொலிவூட்டப்பட்ட ஒரு பாதரசக்கண்ணாடியின் வழியே
தன்னைக் காணத் தேடினான் அவன்
எப் பொய்ப் பிம்பங்களுமற்ற தன் நிஜவுடலை
எந்த பலஹீனங்களுமற்ற தன் வெற்றுடலின் விசையாக்கங்களை
அணுவணுவாய் துலாவித் திரிந்தான் அம்மானுடன்
அப்பாதரசப் பிம்பங்கள் வழியே
கழுத்துக்கு மேலாய் ஆறேழு முகங்களையும்
கழன்று விழ கணம் நோக்கிக் கிடக்கும்
எப்பலமுமற்ற காகித புஜங்களையும்
நின்று துணிய திராணியற்றுத் தவிக்கும்
எலும்புடல் போர்த்திய ஒரு மார்பையும்
விழிகள் விரிய பார்த்து நோந்தான் அவன்
தலை மயிர்களற்ற வெற்று வலுக்கைச் சதைகளையும்
விரல்கள் மழிக்கப்பட்ட வெற்றுக் குஷ்டக் கரங்களையும்
கண்ணாடி வழிக் கண்ட படி தன் கண் பூத்து
தன்னை இறக்க ஆயத்தமானான் அவன்
முற்றும் காய்ந்து போன தன் நம்பிக்கையின் பசுமைகளை
அடிவேராய் சிதைத்தெடுக்கப்பட்ட தன் சிறகுகளெண்ணி
வெறு ஒரு கண்ணாடி வழியாய்
வேறு ஒரு உருவொன்றைத் தேடியலைந்தான்
அச்சராசரிக் கோழை.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It