வாக்குரிமை என்பது தங்களது பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை தங்களது கருத்துக்களைத் தீர்மானிக்கும் வாக்குரிமை தங்களது ஒப்புதலைத் தெரிவிக்கும் வாக்குரிமை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்பப்பெறும் வாக்குரிமை என்று நான்கு முறைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான சர்வாதிகாரிகள் தங்களது ஆட்சிக்கு ஏதோ ஒருவிதமான சட்டப்பூர்வமான வாக்கெடுப்பை நடத்துவதுண்டு அத்தகைய ஒப்புதல் வாக்கெடுப்புகள் ஒன்றிற்கு மேற்பட்ட வேட்பாளர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பதாக இருப்பதில்லை. மாறாக இப்போது அதிகாரத்திலுள்ளவர் ஆட்சியில் தொடர நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என்பதாகத்தான் இருக்கும்.

இராணுவம், காவற்படை, அதிகார இயந்திரம் என அனைத்துமே அனுமதி கேட்கும் ஒரே வேட்பாளரின் பின் துணையாக இருக்கும்போது, அனுமதி மறுத்தால் ஏற்படும் கொடூரமான பின் விளைவுகளைப் பற்றி அச்சப்படும் சூழ்நிலையில், இத்தகைய ஒப்புதல் வாக்கெடுப்பில் எந்த சர்வாதிகாரியும் தோற்பதில்லை. மாறாக 90 விழுக்காடு, 95விழுக்காடு, 99விழுக்காடு என்ற அபரிமிதமான வாக்குகளின் ஒப்புதலைப் பெற்றதாகத்தான் வரலாறு பதிவு செய்துள்ளது. நெப்போலியன், போனபார்ட் உள்ளிட்ட சர்வாதிகாரிகள் அனைவரும் இப்படித்தான் தங்களது சர்வாதிகார ஆட்சிக்கு, ஜனநாயக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். “வாக்குரிமை என்பதும் வாக்கெடுப்பு என்பதும் எப்போதும் ஜனநாயகத்தையே பிரதிபலிக்கும் என்ற எண்ணம் தவறானது”என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.‘மனிதன் ஓர் அரசியல் விலங்கு’ என்று விளக்கினார் தொன்மைக் கிரேக்கத்தின் சிந்தனையாளர் அரிஸ்டாடில் அவர்கள், மனிதனை அரசியல் விலங்கு என்று மட்டுமல்ல சமூக விலங்கு சிந்திக்கும் விலங்கு சிரிக்கும் விலங்கு என்றெல்லாம் கூட குறிப்பிடுவதுண்டு.

அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு என்று ஒப்புக்கொண்டு ஏனைய விலங்குகளிலிருந்து எத்தகைய சிறப்புத் தன்மைகளால், தனித்தன்மைகளால் வேறுபடுகிறான் என்பதை விளக்கும் வகையில்தான் அரசியல் சமூகம் சிந்தனை சிரிப்பு என்ற தனித்தகுதிகளை இணைத்து அடையாளப்படுத்துகிறார்கள். நாமறியாத ஜனநாயகமா என்று வெற்றுப்பெருமிதம் பேசுபவர்கள், வேதகாலத்தில் சபா சமிதி பரிஷத்: சங்ககாலத்தில் மன்றம் பொதியில்: பல்லவர், சோழர் காலத்தில் மகாசபை குடவோலை ஊர் நாடு சித்திரமேழி இவ்வாறு நமது தொன்மையான ஜனநாயக மரபுகளையும், நிறுவனங்களையும் பெருமைபொங்கப் பட்டியலிடுவதுண்டு. உண்மையில் இந்த அமைப்புகளெல்லாம் எத்தகைய ஜனநாயக அமைப்புகள் என்பதைப் பெருமிதக் கலப்பின்றி புரிந்து கொள்ள வேண்டும்.

வேதகால சபா சமிதி என்பது குறுகிய இனக்குழுக்களின் அமைப்புகள் பெரும்பாலும் புலம்பெயர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டிய நிலையில் ஒரு சில நூறு உறுப்பினர்களை மட்டுமே கொண்ட சிறுசிறு இனக்குழுக்கள். தங்களுக்குள் ஒற்றுமைக்காகவும் ஒருங்கிணைப்பதற்காகவும் அமைத்துக் கொண்ட குழுக் கூட்டங்கள்: போர்த் தலைவணை தேர்ந்தெடுக்கவும், அதிகாரப் பொறுப்புகளை பகிர்ந்தளிக்கவும் அவ்வப்போது கூடிய அமைப்புகள் அப்போது அச்சிறுக்குழுக்களிடையே பன்முகத்தன்மை கொண்ட சமூக பொருளாதார அமைப்புகள் உருவாகவில்லை.பழமையைப் போற்றுபவர்களால் மக்கள் ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ளமுடியாது. ஜனநாயகப் போர்வையின் தன்னலங்கள் , இனக்குழு நலன்கள் ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுவந்துள்ளதை வரலாறு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பல்லவர், சோழர் கால மகாசபைகள் இதற்கு ஓர் உதாரணமாகும். இவற்றை உள்ளாட்சியின் பொற்காலம் என்று சிலர் அவசர கோலத்தில் சித்தரிப்பதுண்டு. விவசாயிகளிடமிருந்து, வேளாளர்களிடமிருந்து அன்னியமாக்கப்பட்ட வளமான நிலங்களை தானமாகவும் பெற்றுக்கொண்டு உருவான பிரமதேயங்கள், பிராமண உடைமையான ஊர்கள் பிறரின் தலையீடின்றி தம்மைத்தாமே நிர்வாகம் செய்து கொள்வதற்கான அமைப்பு சபை அல்லது மகாசபை, வேதம் அறிந்த நிலவுடைமையாளனான பிராமணனுக்கு மட்டுமே மகாசபை உரிமை. அப்பகுதியில் வசித்த விவசாயிகள் கைவினைஞர்களுக்கு மகாசபையில் பங்கு இல்லை. ஆனால் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களது உழைப்பைச் சுரண்டியது உழைக்காத மகாசபை பிராமணர்களே. குடவோலை என்பது ஜனநாயகத் தேர்தல் அல்ல. குடத்துக்குள் போடப்பட்ட பெயர் சீட்டுகளிலிருந்து குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் அவர்கள்: வாக்குச்சீட்டு முறையல்ல அது. குலுக்கல் சீட்டு முறையே, இவை உண்மையில் உழைப்பறியா பிராமணர் குடும்பங்களின் தனியாட்சிக்கு வழிவகுத்தன.

இத்தகைய பரந்துபட்ட உள்ளாட்சி உரிமைகள் வேளாளர்களது ஊர் நாடு போன்ற அமைப்புகளுக்கு இருந்ததாக குறிப்புகள் இல்லை. அனைத்து வரிகளிலிருந்தும் பிராமண குடியிருப்புகளுக்கு விலக்கும் அளிக்கப்பட்ட நிலையில் சோழர் காலத்தில் விதிக்கப்பட்டிருந்த 432 வகை வரிகளை யாரிடமிருந்து கறந்தனர். உழைக்கும் விவசாயிகளிடமிருந்து அல்லவா? இருப்பவனுக்கு, உடைமையாளனுக்கு வரிவிலக்கும், உழைப்பவன் மீது கொடும் வரித்திணிப்பும் இதுதான் மகாசபை கால சோழநாட்டின் நிலை இது பொற்காலமா? அப்படியானால் இது யாருடைய பொற்காலம்? இது ஜனநாயகமா? அப்படியானால் இது யாருக்கான எப்படிப்பட்ட ஜனநாயகம்.?ஜனநாயக அமைப்பில் வாக்குரிமையின் பரிமாணத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், எந்த அடிப்படையில், எந்த நோக்கங்களுக்காக, எந்த வரம்புகளின் கீழ், எந்த முறைகளில் எந்த அளவிற்கு அரசியல் தெளிவுள்ளவர்களால், எந்த அளவிற்கு நேர்மையாக வாக்குரிமை வாய்ப்பு பயன்படுகிறது. என்பதைப்பற்றிய மதிப்பீடு வேண்டும்.

வாக்குச்சீட்டு துப்பாக்கிக் குண்டைவிட வலிமையானது என்று கூறுவதுண்டு. ஆனால் துப்பாக்கிகளின் கண்காணிப்பில் நடத்தப்படும் தேர்தல்களில் அரசியல் விழிப்பற்ற, அச்சம் கொண்ட அப்பாவிகளான மக்கள் எப்படி வலிமையானவர்களாக இருக்க முடியும்? இன்று மத்தியக் கிழக்கு நாடுகளில் டுனிஷியா, எகிப்து, லிபியா, பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணும் கிளர்ச்சிகளின் ஜனநாயகக் கூறுகளை நாம் அறிவோம். அங்கெல்லாம் தேர்தல்கள் நடந்ததில்லையா? அங்குள்ள மக்கள் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தியதில்லையா? அங்குள்ள ஆட்சியாளர்கள் எல்லாம் தேர்தல் மூலமாக மக்கள் வாக்குகளைப் பெற்று ஒப்புதலைக் கொண்டிருந்தவர்கள்தாம். அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது வாரிசுகளுக்கும், வாக்குச்சீட்டுகள் மூலமாக அரசியல் வாரிசுரிமையை ஏற்படுத்தியவர்களாக அவர்கள் இருந்து வந்துள்ளனர். துப்பாக்கி குண்டுகளுக்கு வாக்குச்சீட்டுகள் துணைநின்றன. இதை ஜனநாயகம் என்பதா?முதலாளித்துவ அமைப்பில், ஆயுதப் புரட்சியைத் தவிர்க்கவும், வெகுமக்கள் கிளர்ச்சிகளை தவிர்க்கவும், தேர்தல் ஜனநாயகம் பயன்படுகிறது.

ஆட்சி மாற்றங்களுக்குப் பயன்படும் தேர்தல்கள், வாக்குச்சீட்டுத் தேர்தல்கள், அமைப்பு மாற்றங்களுக்குள் பயன்படுவதில்லை. இதைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் விழிப்புணர்வு, அரசியல் கல்வி தேவை. சீனப் பெரும்நாடு தனது கிளர்ச்சி காலத்தின் போது, புரட்சி காலத்தின் போது நவீன சீனாவின் தந்தை எனப் போற்றப்படும் சன் யாட் சென்னின் மூன்று கொள்கைகளைச் சுவீகரித்து கொண்டது. ஒரு அரசியல் சமூகம் உருவாக இந்த மூன்று கட்ட அணுகுமுறை உதவும் என்ற சன் யாட் சென்னின் கோட்பாட்டை அன்றைய சீனப் பொதுவுடைமைக் கட்சியும் ஏற்றுக் கொண்டது. ஜனநாயகம் முறையாகவும், தெளிவாகவும், வெகு மக்களுக்குப் பயன்படும் வகையிலும் செயல்பட வேண்டுமென்றால் அடிப்படை மக்களது உளப்பாங்கு பழமையிலிருந்து விடுதலை அடைய வேண்டும். ஆண்டான் அடிமை, எஜமான் சேவகன், ராஜா பிரஜை, கொடையளிப்பவன் கொடைபெறுபவன், அருள் பாவிப்பவன் அருள்நாடி தவமிருப்பவன் என்ற இனக்குழு நிலமானிய மன்னராட்சி கால மனநிலையிலிருந்து விடுதலை அடையவேண்டும்.

1960 களில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்ததது. தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக அன்றைய குவாலியர் மகாராணி ஹெலிகாப்டரில் மலைவாழ் மக்கள் வாழுமிடங்களுக்கு செல்கிறார். ஒருமலைப் பகுதி பழங்குடி மக்கள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு கால்நடையாக வருவதற்குள் காலதாமதமாகி விடுகிறது. ஹெலிகாப்டரில் வந்த மகாராணிக்கு காத்திருக்க நேரமில்லை. சென்று விடுகிறார்: மகாராணி அந்த இடத்தை விட்டு பறந்து செல்லும் முன் எங்கு அமர்ந்திருந்தார். என வினவுகின்றனர்: அங்கே இருந்த ஒரு பாறை சுட்டிக்காட்டப்பட்டது. அந்த அப்பாவிப் பழங்குடியினர் அந்தப் பாறையின் முன் மண்டியிட்டு, பூஜை செலுத்திவிட்டு பயபக்தியுடன் சென்று விடுகின்றனர். ராஜபக்தர்களான பழங்குடியினரின் வாக்குச் சீட்டுகள் யாருக்கு விழுந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியுமல்லவா?

காடுமலை மேடுகளை கால்நடையாகவே கடந்து கோவணாண்டிகளாக வாழும் பழங்குடியினர் ஹெலிகாப்டரில் பறக்கும் ராணியிடம் காட்டும் விசுவாசம், ஜனநாயகத்திற்கு பயன்படுமா? இத்தகைய நிலமான்ய பக்திகால விசுவாசங்கள் மலிந்த சமூகத்தில் ஜனநாயகமும் வாக்குச்சீட்டும், வேடிக்கை பொழுது போக்கும் பொருள்களாக அல்லவா மாறிவிடும்? இந்த மனநிலை மலிந்த நாட்டில் மக்கள் ஜனநாயகம் தழைக்குமா? அல்லது பண நாயகம், தாதாக்கள் நாயகம், குடும்ப நாயகம் தழைக்குமா?ஜனநாயகம் வெற்றிபெற - வாக்குச்சீட்டு வலிமை பெற முதல் தேவை மக்கள் உளப்பாங்கை ஜனநாயகப்படுத்துவதே. ஆட்சி அதிகாரம் தங்களுக்குப் பிடித்தவர்களிடம் கொடுப்பதற்கு என மட்டும் வாக்குச் சீட்டைப் பயன்படுத்தாமல், மக்களுக்காகவே ஆட்சி அதிகாரம் செய்பவர்களாக இருக்கும் வகையில் வாக்காளர்கள் ஜனநாயகத் தெளிவு பெற வேண்டியுள்ளது.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை டெண்டர் விடுவதைபோலத் தேர்தல்கள் அமைந்துவிடுகின்றன. நாட்டின் சுதந்திரத்தைப் பாதிக்கும் உச்ச பட்ச முடிவுகள் நாட்டின் பாதுகாப்பையும். நீண்டகால நலன்களையும் பாதிக்கும் உயிர்நாடியான முடிவுகள் மக்களது அறிதலும், அனுமதியும் இன்றியே எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் அணுசக்தி ஒப்பந்தம் கூட மக்கள் அஙகீகாரத்தைக் கோராமல் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியே முடிக்கப்பட்டுள்ளது.40 விழுக்காடு வாக்குகளைப் பெற்றவர்கள் 80 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களைப் பெறுகிறார்கள். மாநில சட்டசபைகளிலும் இதே நிலை. 60,70 விழுக்காடு சிதறிக்கிடப்பதால் சிறுபான்மை ஆள்கிறது.

மக்கள் நலன்கள் காற்றில் விடப்படுகின்றன. தனியார்மயம், உலகமயம், வணிகமயம் இவையெல்லாம் நேரடியாக வாக்குச் சீட்டுகள் மூலமாகவா முடிவு செய்யப்படுகின்றன? திருவிழாத் தேர்தல்கள் உண்மையான ஜனநாயகத் தேர்தலாக மலர வேண்டுமென்றால் வாக்குச்சீட்டுகள் உண்மையிலேயே மக்களாட்சிக்குப் பயன்பட வேண்டும் என்றால் வெகுஜன மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, கைவினைஞர்களுக்கு இளைஞர்களுக்கும் அரசியல் விழிப்புணர்வு, அரசியல் பயிற்சி தேவைப்படுகின்றது. விழிப்புணர்வும், அரசியல் அறிவும் கூர்மைப்படாத வாக்குச்சீட்டு ஜனநாயகம், வாக்காளர்களை ஏய்ப்பு சக்திகளின் பகடைக் காய்களாகவே மாற்றிவிடும்.இந்த அரசியல் அறிவையும், உணர்வையும் பரவலாக்க சீன மக்கள் புரட்சி முழுமை அடைய மூன்று கட்டங்களை ஏற்றுக் கொண்டனர்.

அராஜகத்தினாலும், அன்னிய ஆதிக்க சக்திகளிலிருந்தும் நாட்டைமீட்டு ஒன்றுபடுத்துவதற்கு இராணுவச் செயல்பாட்டு அல்லது ஆயுதம் தாங்கிய மீட்புக் கிளர்ச்சி முதல் கட்டமெனப்பட்டது. பிறகு ஜனநாயக அமைப்புகளில் மக்கள் அறிமுகமாகி, ஜனநாயக அமைப்புளைப் பயன்படுத்துவதிலும், பொதுவான தேசிய அளவிலான அரசியல் சித்தாந்த நோக்கங்களுக்கு ஏற்ப வாக்குரிமை - பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் மக்கள் பயிற்சி பெறுவதற்கான அரசியல் பயிற்சிக்காலம் இரண்டாவது கட்டமாகக் கூறப்பட்டது. இந்த இரண்டாவது கட்டம் மிக முக்கியமானது. அதுவரையில் நிலமானிய அடிமை அமைப்பிலான சமூக உறவுகளில் சமூக அரசியல் நெறிகளில் ஊறிப்போயிருந்த மக்கள், எஜமான பக்தி, ராஜசேவை போன்ற மனத்தளைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது.

சுதந்திரமான குடிமக்களாக, தங்கள் பொதுநலனை முன்வைத்து எந்தவிதமான பணபடை, அதிகார பலம், தனிமனித குடும்பச் செல்வாக்குகளுக்கு ஆட்படாமல் தெளிவான அரசியல் அறிவுடன் உணர்வுடன் மேலான சமூகப் பொருளாதார நோக்கங்களுக்காக வாக்குச்சீட்டை கவனமாகவும், முறையாகவும், சுதந்திரமாகவும் கையாள்வதற்கான அறிவையும், உணர்வையும், உறுதியையும் அனுபவத்தையும் தரும் பயிற்சி காலமாக இந்த இரண்டாவது கட்டம் ஏற்கப்பட்டது. இந்தக்கட்டத்தில் போட்டிகள் நிறைந்த பலகட்சி அரசியல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தப் பயிற்சியை 10 அல்லது 15 ஆண்டுகாலம் பெற்று முதிர்ச்சியடைந்த தேசிய சமூகத்திற்கு முழுமையான பல அரசியல் தத்துவங்களையும், கட்சிகளையும் அனுமதிக்கும் பலகட்சித் தேர்தல் ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டால் அதை அரசியல் தெளிவுடன் ஊழல் நோக்கங்களுக்கு பலியாகாமல் மக்கள் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த மூன்றாம் கட்டம்தான் முழுமையான ஜனநாயகம், பொருள்பொதிந்த ஜனநாயகம் என்றும் விளக்கப்பட்டது. பழமைத் தளையிலிருந்து விடுதலையடைந்து முற்போக்கான பொதுவுடைமைச் சக்திகள் - பெரியாரியல் சக்திகள் - அடிப்படை தேசிய சக்திகள் இனியும் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்.     இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சிற்பியாக சிறப்பிக்கப்படுகின்ற டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் இந்தியா குடியரசாக அறிவிக்கப்படுகின்ற போது குறிப்பிட்டதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நாளை முதல் வயது வந்த ஆண், பெண் அனைவருக்கும் வாக்கு என்ற அரசியல் சமத்துவம் உறுதிசெய்யப்படுகின்றது. ஆனால் இந்த அரசியல் சமத்துவம் சமூக பொருளாதாரத்தில் சமத்துவமின்மையுடன் வருகிறதே என்று வேதனையுடன் அவர் குறிப்பிட்டார்.அரசியல் வாக்கு என்பது சமூகப் பொருளாதார சமத்துவத்தை சோசலிசத்தை தரமுடியாவிட்டால் ஜனநாயக நோக்கத்தை அடையமுடியாது. ஜனநாயக வாக்குச்சீட்டைப் பயன்படுத்தப்போகின்றவர்கள், குறிப்பாக இளைஞர்கள் இதனை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த சமத்துவ அடிப்படையில்தான் தோழர் மாசேதுங் எதிர்பார்த்த நூறு பூக்கள் மலரட்டும் என்ற ஜனநாயகப் பண்பு சமூக நோக்கங்களைச் சிதைக்காமல் நடைமுறைப்படும்.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் செய்த ஊழல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பணம் கொடுத்த விவகாரம் ஜனநாயகத்திற்கு வேட்டு வைத்திருக்கிறது.இது வெறும் துளிதான். இன்னும் கடலளவு தகவல்கள் இருப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 7வருடத்திற்கும் அதிகமாக ஆட்சியை செய்து வரும் காங்கிரஸ் இன்னும் எது மாதிரியெல்லாம் ஜனநாயகத்தை விற்றிருக்கிறதோ தெரியவில்லை. ஒருவேளை, விக்கிலீக்ஸ் அமைப்பு அனைத்து தகவல்களையும் வெளியிட்டால், காங்கிரஸ், பிஜேபி தலைகள் காணாமல் போகும் அபாயம் ஏற்படலாம்.

ஆனால், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று ஊளையிடும் பிரதமரால், அந்த தகவல்களை மறுக்க முடியவில்லை. தனது அமைச்சரவை சகா செய்யும் குற்றத்தையே தனக்கு தெரியாது என்று ஓடி ஒளியும் மன்மோகன் சிங் இதைப்பற்றியா வெளிப்படையாக பேசப்போகிறார். காங்கிரஸ் எத்தனையோ பிரதமர்களை உருவாக்கியிருக்கிறது. அதில் மிக மிக மோசமான பிரதமர் இவராகத்தான் இருப்பார்.மதவாதம் தவிர்த்து வெளிநாட்டு கொள்கைகளில் காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கு பெரிய அளவில் வேறுபாடில்லை என்பது இப்போது ஆதாரப் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உடனான அணு சக்தி ஒப்பந்தத்தை காங்கிரஸ் எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று முழு மூச்சோடு முயன்ற போது இடதுசாரி இயக்கங்கள் அதை வன்மையாக எதிர்த்தன. அத்தோடு பிஜேபியும் எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டது.

ஆனால், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணம், பிஜேபி நடத்திய நாடகத்தை அம்பலமாக்கியுள்ளது. இந்த இருகட்சிகளில் எது ஆட்சிக்கு வந்தாலும் அது முதலாளிகளின் ஆட்சியாகவே இருக்கும். பிரதமர் யார்? நிதியமைச்சர் யார்? உள்துறை அமைச்சர் யார்? என்பதை தாங்கள்தான் முடிவு செய்வதாக வாக்காளர்கள் கருதலாம். ஆனால், உண்மை படுபயங்கரமானது. தேர்தலுக்கு முன்பு நிதியாக கோடிக்கணக்கில் அரசியல் கட்சிகளுக்கு அள்ளித்தரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிறகு, அந்த பெருந்தொகையை லாபமாக ஈட்ட துடிக்கின்றன. ஒரு சில பெருமுதலாளிகள்தான் இந்தியாவில் பிரதமர். நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் போன்ற அதிமுக்கிய பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கிறார்கள். நீரா ராடியாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், அப்படி அந்தப் பதவி நியமனங்களுக்கு நடக்கும் பேரத்தை வெளிக்கொண்டு வந்து சாமானிய மக்களும் அதைப்பற்றி பேச வைத்திருக்கிறார்.

பெரு முதலாளிகளுக்கு அதிகம் விசுவாசமாக இருப்பது யார் என்பதிலும் இரு கட்சிகளுக்கும் எப்போதுமே போட்டிதான். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம், வரி விலக்கு அல்லது புதிய வரி இல்லாத பட்ஜெட் இவற்றைத்தான் இந்த அரசுகள் திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கின்றன. முற்றிலும் தொலைநோக்கற்ற திட்டங்களை தனியார் அமைப்புகளின் பயனுக்காக இந்த அரசுகள் செயல்படுத்தியதையும் நாம் கண்டிருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக காங்கிரஸ் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்ட வேண்டிய நிலுவை வரியை தள்ளுபடி செய்துள்ளது. இது ஒன்றும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் பிரச்சனை அல்ல. 3லட்சத்து 74ஆயிரத்து 937 கோடி ரூபாய் வரியை காங்கிரஸ் ரத்து செய்திருக்கிறது.

ஒருவகையில் தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வர வேண்டிய வருமானத்தை காங்கிரஸ் தடுத்துள்ளது. அத்தோடு ஏற்கெனவே கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு மீண்டும் மீண்டும் வரிச்சலுகை கொடுத்து வருகிறது. இந்த வரிச்சலுகைகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு நிகரானது என்றுதான் சொல்ல வேண்டும். அதை அவர் எடுத்துக் கொண்டார். ஆனால் இதில், இங்கு வரிவிலக்கு என்ற போர்வையில் இவர்களாகவே கொடுத்திருக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.தினசரி உணவுக்கு வழியில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் குமுறும் நாட்டின் அரசாங்கம் இதுபோல் செயல்படுவது காலத்தின் கோலமாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

கடந்த வாரம் கூட ஐக்கிய நாடுகள் சபை உணவு பற்றாக்குறை மற்றும் சரிந்து வரும் விவசாய உற்பத்தி குறித்து அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருந்தது. அதில், அழிவின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் விவசாய துறையை அரசுகள் மீட்க பாடுபடவேண்டும் என்று சொல்லியிருந்தது. ஆனால், இந்தியாவை ஆளும் காங்கிரஸ், கட்சிக்கு கோடிகளை கொட்டிக் கொடுக்கும் பெரும் முதலாளிகளை வாழ வைப்பது முக்கியமா? அல்லது ஒருவேளை உணவுக்குத் திண்டாடும் விவசாய மக்களின் குறை தீர்ப்பது முக்கியமா? என்றால் அந்தக்கட்சி முதலாளிகளின் பக்கமே நிற்கும். இது காங்கிரசுக்கு மட்டுமல்ல பிஜேபிக்கும் சாலப் பொருந்தும். இந்த கட்சிகளுக்கிடையே இப்போது நடக்கும் ‘யோக்கியர்’ போட்டி ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதுதான். இந்த போட்டி இவர்களின் போலி முகத்திரையை இன்னும் கிழித்தெறியும் என்று நம்பலாம்.

Pin It