கடைசியாக
எப்போது கிடைத்ததென்று
மூளையறைகளை காலிசெய்தும்
கிடைக்கவில்லை
ஸ்பரிசம் பற்றிய ஞாபகம்..
கன்னம் வழித்துமுறிக்கும்
சுருங்கிய விரல்களைப் பார்க்கையில்
வராத ஞாபகத்தை,
காதலுடன் கோர்த்த
விரல்களைக் காண்கையில்
தோன்றாத ஏக்கத்தை,
பிஞ்சுவிரல் பற்றிச்செல்லும்
அன்னையின் விரல்கள்
திறந்து கொணர்ந்தன
ஞாபகப்பேழையில்
பொக்கிஷமாய் பாதுகாக்கும்
வீட்டில் அவன் கழித்த கடைசி இரவையும்;
தலை கோதிய அன்னையின் ஸ்பரிசத்தையும்..
தொடுகைக்கான ஏக்கத்தையும் சேர்த்து
துடைத்துக்கொள்ளும்போது
கண்ணீருடன் சொட்டிக்கொண்டிருந்தன,
ரத்தப்பஞ்சு மூட்டையினூடே
அவன் விரல்களும்..

Pin It