புதுநானூறு - 3:

மண்ணும் விண்ணும் பொய்யே என்றதும்
கண்ணறக் காண்பவை மெய்யே யென்றார்
இருவேறு ஞானியர் மோதிய போதிலும்
ஒருங்கே நின்றனர் செயல்படா நிலையில்
தொடரும் போரில் முடிவாய் நுழைந்தனர்
சுடரொளி அறிஞர் மார்க்சும் எங்கல்சும்
கண்ணறக் காண்பவை மெய்யென் றாலும்
மண்ணென நிற்பது மடமை யாகும்
வாழக்கை மாற்றமே ஞானத்தின் முடிபு
சூழ்நிலை மாற்றம் மனிதன் கையிலே
மிகைப் பொருள் தம்மைத் தனியா ரிடத்துத்
தொகையாய்ச் சேர்க்கா அரசை அமைப்பது
மனிதனின் விடுதலை வழியே என்றனர்
எனினும் இதனை அடையும் பாதை
கரடு முரடு சிறைச்சாலை வாசம்
மரணமும் வாதையும் மிகைப்பட நிலவும்
இருப்பினும் உழைப்பவர் அரசை அமைப்பது
பிறப்பவர் விடுதலை அடையும் பொருட்டே
 
பொருட்கள் யாவும் மாயையே என்று ஆன்மீகவாதிகள் கூறிய உடனேயே பொருட்கள் உணமையே என்று லோகாயதவாதிகள் பதிலளித்து விட்டனர். ஆனால் இரு தரப்பு தத்துவ ஞானிகளும் எதிரெதிரே வாதாடிய போதிலும் உலகை விளக்குவதுடன் நின்றுவிட்டனரே ஒழிய அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. தொடர்ந்து வந்த தத்துவப் போரில் கார்ல் மார்க்சும் பிரடெரிக்  எங்கல்சும் முடிவாக நுழைந்தனர். லோகாயதவாதிகள் கூறுவது உண்மையே என்றாலும் செயல்படாமல் இருப்பது சரியல்ல என்றும்  சூழ்நிலைகள் தான் சிந்தனையை நிர்ணயிக்கிறது என்றாலும் மனிதனால் சூழ்நிலையை மாற்ற முடியும் என்றும் கூறினார்கள். மிகை உற்பத்தியைத் தனியார் கையில் லாபமாகச் சேர்க்க அனுமதிக்காத, அவற்றைப் பொதுவிலேயே வைத்துக் கொள்ளும் அரசை அமைப்பது, மனித இனம் சுதந்திரமாக வாழ்வதற்கான வழி என்றும் கூறினார்கள். இருப்பினும் அப்படிப்பட்ட அரசை அமைக்கும் பாதை கரடு முரடானது. சிறைச் சாலை வாசம், மரணம், கடும் சித்திரவதைகளை இவ்வழியில் சந்திக்க நோ¢டும். இவ்வளவு கொடுமைகள் இருந்தாலும் இனி பிறப்பவர் (வருங்கால சந்ததியினர்) சதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் உழைக்கும் மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

Pin It