பேய்கள் குறித்தான
உள்ளீடற்ற பீதியை
உடனுக்குடன்
உடைத்தெறிவாள்
விளக்கங்களுடன் என் அம்மா

சனிக்கிழமை இரவு கேட்கும்
மோஹினியின் சலங்கை ஒலியை
சந்தை முடிந்து ஊர் திரும்பும்
மாட்டு வண்டிகளின் ஒலி என்பாள்

முருங்கை மரத்தில் எழும்
திடீர் சலசலப்பை
கள்ளப்பூனை பால் குடித்து
எல்லை தாண்டுகிறது என்பாள்

தலையும் கைகளுமற்று
ஜன்னலில் தெரியும்
அச்சுறுத்தும் உருவத்தை
கொடியில் இருந்து எடுக்க மறந்த
சட்டையின் நிழல் என்பாள்

இப்படியாகக் கழிந்தது
என் குழந்தைப்பருவம்
நண்பர்களின் ரசிப்பான
பேய்க்கதைகளைக்கேட்டு
பொய்யாக பயந்தபடி

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It