ஆழ்கடல் இருள் பள்ளத்தாக்கின்
கும்மிருட்டை தின்று முடங்கியவள்!
மின்னி மறையும் ஊசி முனை வெளிச்சத்தில்
பரவசமாகி பின் பெருமூச்சுடன் சுருண்டு கிடந்தவள்! 

பின்னொரு நாள்
உருண்டெழுந்த பிரபஞ்சத்தின்
பேரொளியினால் நாகரீக சமவெளிக்கு எறியப்பட்டவள்! 

இருள்களின்
பெருங்கடல்களில் மட்டுமே
நீந்திப் பழகிய அவளின் கண்கள்,
சுதந்திரத்தின் பேரண்ட பிரகாசத்தால்
சுய ஒளியை பொசுக்கிக் கொண்டது!! 

தோலின் மேலாடை தரும்
சிறு நிழல்களையும்
இருள் பிரதேசமென
வெறுத்து ஒதுக்குகிறாள்! 

மறைப்பதால் வெளிச்சம் தடையாகும் என்பதால்....
நிர்வாணத்தை திறந்தே வைக்கிறாள்! 

சதைகளை பிறாண்டித் தின்ற
நாய்களை தன் சதைகளைக் காட்டியே காயப்படுத்துகிறாள்!
காசு முளைக்கும் மரம் எந்த இடுக்குகளில்
இருக்கிறது என்ற சூத்திரம் சொல்கிறாள்! 

மேடு பள்ளம் வளைவு காட்டி
மரணத்தை கொடுக்கிறாள்! 

சமவெளி தேடி
வெருண்டு பாய்ந்த சீற்றத்தில்,
மறுபடியும் பள்ளத்தாக்கிலேயே வீசப்பட்டவள்
நெடுந்தூரம் சமவெளி கடந்தும்,
வெளிவந்த இடம் எதுவென்று தெரியாமல்
மீண்டும் பயணப்படுகிறாள் பள்ளத்தாக்கை நோக்கி!!! 

- மால்கம் X இராசகம்பீரத்தான்

Pin It