எவரையும் அறியாமல்
அவரவர்களின் ஏதோவொரு
உள் வெளிரங்க உறுப்புகளொன்றில்
பாதியிறங்கிக் கிடக்கிறது
சாத்தானின் கத்தியொன்று
பதம் பார்த்த படி.

தடித்து உருண்ட பிடியும்
மெலிந்து கூர்ந்த பதங்களும்
இப்படியான வழமைகளிலிருந்து
வெகு தூரப்படுகின்றன
சாத்தானின் கத்திகள்

மெல்லிசையை காற்றிலிழைந்தபடி
மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே
மத்தியத்தரப்பட்ட வெளியொன்றில்
போதையுற்றுக் கிடக்கும்
பொன் மாலைப் பொழுதுகளில்
உங்களுக்குள் உள்ளிறக்கப்படுகின்றன
சாத்தானின் கத்திகள்

உங்களுடைத்த ஊன் வினைகளோ
உங்களுடையா விதி தன் வினைகளோ
ஏதோ ஒன்று இன்னமும் உங்களை
அருகாமையிலிருத்தி அல்லலுருத்துகிறது
அக்கத்திகளின் பால்

சிற்சில கத்திகளை
உடலேந்தித் திரிவதும்
பற்பல கத்திகள்
உடலையேந்தித் திரிவதும்
அவரவர் பிறவிப் பயன்களென்றும்
அல்லது பிறவாப் பயன்களென்றும்
நாசூக்காய் அகன்று விடலாம்
இல்லையென்றாயினும்
கத்தியால் அல்லலுற்ற
ஆதாமை நினையலாம்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It