ஆசையாய் என் தந்தை சூட்டி
அழகு பார்த்த என் இயற்பெயர்
என் ஆசிரியர் நாவிற்கிசையவில்லை.

அவ்வப்போதான ஏதாவது ஒரு பட்டப் பெயர்
எனது பெயராகிப் போனது
நண்பர்களுக்கும்.

டேய்!
பெரியவனே!
கண்ணா!
இப்படித்தான் அழைக்கப்படுகிறேன்
வீட்டிலும்.

தன் கணவன் பெயர்
என் பெயர் என்பதால்
என் பெயரின் பக்கம் கூட வருவதில்லை
பாட்டியும்

அக்காவிற்கு தம்பி என்றும்
தங்கைக்கு அண்ணா என்றும்
மனைவிக்கு என்னங்க என்றும்
என் பெயராகவேப் போனது

பார்க்கையில் எல்லாம்
என் பெயர் கேட்டு
நினைவுறுத்த முயன்று
தோற்றுக்கொண்டேயிருக்கிறார்
பக்கத்து வீட்டுப் பெரியவர்.

அவ்வப்போது ஏதோவொரு வங்கியிலிருந்தோ
அல்லது தொலைபேசி நிறுவனத்திலிருந்தோ
ஒரு இளம்பெண்
நீங்கள்தானே அவர் என
என் பெயரை கடித்துக் குதறி
மென்று துப்பும் இம்சை வேறு
பல சமயங்களில்.

எவரோ சொல்லிக்கொடுத்த என் பெயரை
தப்புத் தப்பாய் தன் மழலை வாக்கில்
என் இரண்டு வயது மகள்
உச்சரித்து முடித்த அக்கணம் மட்டும்
மனது மகிழ்ந்து நிறைந்தது.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It