என் இலக்கிய நண்பர் ஒருவர் கவிதை சொன்னார்.
 
”இந்தியா ஒளிர்கிறது.
தேசமெங்கும்...
தீவீரவாதத் தீ..!”
 
muslims_360இந்த கவிதையை நான் திருத்தச் சொன்னேன். ஏனென்றால் உலகில் எந்த பிரச்சினையும் இல்லைவே இல்லை. தீவிரவாதம் மட்டுமே ஒற்றைப் பிரச்சினை... என்கிற அமெரிக்காவின் குரல் இது. ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்திய அமெரிக்காவின் பாணியில் பச்சை வேட்டை நடத்தும் நாடாக நாம் உள்ளோம். இந்தியாவில் நாம் வாழ்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் நாம் அமெரிக்காவின் அடிமைகள்.
 
அவர் கவிதையை திருத்தினார்..!
 
”இந்தியா ஒளிர்கிறது..
தேசமெங்கும்...
வறுமைத் தீ..!”
 
இலக்கியம்,வரலாறு ஊடகம் என எல்லாவற்றிலும் ஆதிக்கவாதிகள் சொல்வதைத் திரும்ப சொல்லும் கிளிப்பிள்ளைகள் போல வாழ்கிறோம்.
 
இது நம்பிக்கைகளின் தேசம்.
 
கர்ணன் கவசகுண்டலத்துடன் பிறந்தான் என்கிற நம்பிக்கை மாதிரி ஒவ்வொரு இஸ்லாமியனும் வெடிகுண்டுடன் பிறக்கிறான் என்பது ஊடகங்களின் நம்பிக்கை. எல்லா சமூகத்திலும் குற்றவாளிகள் உண்டு. ஆனால் ஒரு சமூகத்தையே குற்றவாளியாகப் பார்க்கிற மனோபாவம் மிகவும் ஆபத்தானது.

சாதியத்தை வேரறுப்பதில் முனைந்த பெளத்தம், ஆரியத்திற்கு முன்னால் முகவரி இழந்தது. கிறிஸ்தவம் இந்திய சூழலில் சாதியத்தைத் தழுவிக் கொண்டது. இஸ்லாம் மட்டுமே சாதியத்தை முற்றிலுமாக மறுப்பதில் வெற்றி கண்டது. சாதியத்தின் உயர் அடுக்கில் சுகம் காணும் பார்ப்பனியம் இதை எதிர்கொள்ள முடியாமல் அவதூறுகளின் அரசியலில் களம் இறங்கி உள்ளது.
 
பொதுவுடமை அரசியலை உலக அளவில் அதிகாரம் இழக்கச் செய்து விட்ட ஏகாதிபத்தியம், இஸ்லாமிய அரசியலின் போர்க்குணத்தை எதிர்கொள்ள திணறி வருகிறது. ஆகவே பயங்கரவாதம் என்கிற சொல்லைக் கட்டவிழ்த்து விட்டு, ஊடக சர்வாதிகாரம் மூலம் அதை நிறைவேற்றி வருகிறது.
 
ஊடகத்தின் மையமாக திகழும் திரைக்கலை இதில் முக்கிய பங்காற்றுகிறது. கறுப்பு வெள்ளை காலத்தில் துணை கதாபாத்திரமாகவும் உதவி செய்பவராகவும் முஸ்லிம்களை சித்தரித்தனர். இந்தப் போக்கை ரோஜா என்கிற திரைப்படத்தின் மூலம் மணிரத்னம் என்கிற பார்ப்பனர் மாற்றி வைக்கிறார்.
 
இந்திய ஆக்கிரமிப்பிலும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பிலும் மூச்சு திணறும் ஒரு மாநிலத்தைப் பற்றி... அரசு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நியாயப்படுத்தி அம்மக்களை கொச்சைப் படுத்தினார். அங்கே ஒவ்வொரு குடிமகனும் ஒரு சிறைக்கைதியைப் போல நடத்தப் படுகிறான் என்கிறனர் மனித உரிமை ஆர்வலர்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வணிக வெற்றிக்காக மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து வல்லரசு போன்ற இந்துத்துவப் படங்கள் வரத் தொடங்கின. அர்ஜூன் போன்ற மத வெறியர்கள் தேசப்பக்தியின் பெயரால் முஸ்லிம்களை இழிவுப்படுத்தி, தொடர்ந்து இயங்கினர்.
 
பாபர் மசூதி இடிப்பைக் குறித்து இருட்டடிப்பு செய்து விட்டு அதன் எதிர்வினையாக நிகழ்ந்த பம்பாய் குண்டுவெடிப்புக்கு எதிரான குரலை மட்டுமே பதிவு செய்ததன் மூலம் மணிரத்னம் யார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பால்தாக்கரேயிடம் பாராட்டு பெற்றதன் மூலம் அவருக்கும் தேச பக்தி இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
 
உலக நாயகன் கமல் தன் பங்குக்கு ஏற்கெனவே ஹே ராம் படத்தைப் போலவே, தற்போது 'உன்னைப் போல் ஒருவன்' என தன் கலைச்சேவையை தொடர்கிறார். கடவுள் இல்லை என்கிற பார்ப்பானை ஆயிரம் முறை சந்தேகிக்க வேண்டும் என்கிற அண்ணன் அறிவுமதியின் வார்த்தைகளுக்கு சான்றாக விளங்குகிறார்
 
இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய வலிமையோ, இதை எதிர்கொள்ள போதிய வரலாற்றுப் பார்வையோ அரசியல் அறிவோ ஊடகங்களில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இல்லை. ஆகவே இஸ்லாமியர் பற்றிய சித்திரத்தை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். அவதூறுகளின் அரசியல் தொடர்கிறது.

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It