ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கான உண்மையான எதிர்ப்புகள் ஏன் என்பது தற்சமயம் வெளி வரத் துவங்கியுள்ளது. இரண்டு விதமான சிந்தனைகளை எதிர்ப்பாளர்கள் தோற்றுவிக்க முயல்கின்றனர்.
முதலாவதாக இந்து மதத்தினைப் பிளவு படுத்த முயல்வதாக கூக்குரலிடும் மதவாதிகள் அல்லது மதத்தின் போர்வையில் தங்களின் மத்திய அரசின் மீதான பிடிப்பினை உறுதி செய்ய முற்படும் மேல்தட்டு வர்க்கம்.
இரண்டாவதாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு நாட்டை ஜாதிவாரியான போராட்டங்களை நோக்கி நகர்த்திவிடும் எனக் கூறும் அதே மேல்தட்டு வர்ணாசிரமச் சிந்தனையாளர்கள்.
நாட்டின் வளத்தை முழுமையாகத் தங்கள் இனத்தை வளர்க்க உபயோகப் படுத்திக் கொண்ட நபர்கள் இன்று இத்தகைய வாதங்களின் மூலமும் அரசின் இந்தக் கணக்கெடுப்பு குறித்து முடிவெடுக்கும் தகுதிவாய்ந்த பதவிகளில் ஒட்டிக் கொண்டுள்ள தங்கள் ஆதரவாளர்களின் மூலமாக இந்தக் கணக்கெடுப்பை தடுக்கச் செய்யும் சூழ்ச்சிகள் எண்ணிலடங்கா??
இன்று ஆடு, மாடு, கோழி, சிறுத்தை என ஊர்வன, நடப்பன, பறப்பன என ஆறறிவு இல்லாத அனைத்தையும் ஏதாவதொரு வகையில் கணக்கெடுக்க அரசு ஆவண செய்கின்றது. அதாவது அதில் அருகிவரும் இனங்களைக் கண்டு பல்லுயிர்ப் பெருக்கத்தில் அவற்றின் இனம் வளர்ச்சியடைய என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதன்படி தனது கொள்கைகளை வடிவமைக்க முடிவு செய்கின்றது.
ஆனால் ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டும் தனது வளர்ச்சித் திட்டங்கள் சரியான விதத்தில் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என கணக்கெடுக்க அரசு தயங்குகின்றது, தடுமாறுகின்றது. இட ஒதுக்கீடு என்று ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு வழங்குவது அந்த வகுப்பின் வளர்ச்சிக்காக என்பதாகுமானால் அந்த வளர்ச்சி அந்த வகுப்பினரைச் சென்றடைந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதானே உண்மையான அக்கறையாகயிருக்க முடியும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்களின் வளர்ச்சியை அறிவதற்காக அரசால் அவர்களின் இல்லத்தில் கணினி, தொலைபேசி, இணையப் பயன்பாடு, ஆடு, மாடு, கோழி வரை அனைத்தையும் கணக்கெடுக்க முடியும் போதில் இந்த பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட ஏன் உயர் வகுப்பின மக்களையும் அவர்கள் இந்த நாட்டின் வளத்தில் / வளர்ச்சியில் எந்த அளவிலான பயன்பாடுகளைப் பெற முடிந்துள்ளது என்பதை கணக்கெடுக்க ஏன் மறுக்கின்றது?
உண்மையிலேயே எல்லோருக்குமான அரசாக இருக்கும் பட்சத்தில், சமூக நீதியானது அனைவருக்கும் கிடைத்து விட்டது என்பது உண்மை என எண்ணும் அரசாக இருக்கும் பட்சத்தில் இந்த மத்திய மாநில அரசுகள் தங்களின் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்தும் அவர்களில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகளின் ஜாதி அல்லது வகுப்பு பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட இயலுமல்லவா?? உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவமானது சரியான விகிதாச்சாரத்தில் இருக்கும்பட்சத்தில் அது இத்தகைய இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்களின் வாதத்தை தவிடு பொடியாக்கி விடுமல்லவா??
அப்படியில்லாத பட்சத்தில் அரசு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தனக்குத் தெரியும் உண்மைகளை மறைப்பதாகத்தானே எண்ண முடியும். இதற்கு அரசு அதிகாரத்தில் உள்ள மேன்மக்கள்தான் காரணம் என்பதும் அதை அரசானது மீற இயலாமலுள்ளது என்பதும்தானே காரணமாக இருக்க முடியும்.
நாட்டின் வளமானது ஏதாவது ஓரிடத்தில் குவியாமல் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான் மக்களாட்சியின் முக்கியக் கூறு. இந்த வேலை வாய்ப்பு,கல்வி போன்றவை அனைவரையும் சென்றடைந்தால் மட்டுமே அரசின் அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சி என்ற கொள்கையானது சாத்தியமாகும். அதுதானே நாம் தெருவெங்கும் முழங்கும் அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்கும். அத்தகைய சமச்சீரான வளர்ச்சியை அனைத்துத் தேசிய இனங்களும் அடையவில்லை என்பதன் காரணமாகத்தான் நாம் இட ஒதுக்கீடு மற்றும் பல சமூக நலத் திட்டங்களைச் செயல் படுத்துகின்றோம். எனவே நமது சமூக நலத் திட்டங்களின் பலனானது குறிப்பிட்ட இலக்கினை அடைந்து அனைவரின் முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளதா என்பதை எப்படி அளவிட முடியும்? பிற்படுத்தப்பட்டவர்களிலும் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களே அனுபவிப்பதை எப்படி நாம் சமூக நீதி என்று கூற இயலும். அதிலும் அதன் பலனையடையாத முன்னேற்றமடையாதவர்களைச் சென்றடைந்தால்தான் சமூக நீதி வென்றது என்று கூற இயலும். அதற்காகவேனும் இந்தச் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
இன்று நமது 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக்கணக்கெடுப்பில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், வளர்ப்புப் பிராணிகள், இணையப் பயன்பாடு போன்றவற்றைக் கணக்கிட முடிவு செய்துள்ளோம். அதனையெல்லாம் கேட்டுப் பெற முடியும் கணக்காளர்களால் இந்த மக்களின் சாதியைக் கேட்டுப் பெற இயலாது என்று கூறுபவர் சிலர், சாதி தானாகக் கூறும் போது தவறாகக் கூறப்படும் வாய்ப்புள்ளது என்பவர் சிலர், தானாக முன்வந்து அளிக்கும் தகவல்களாதலால் அதில் தவறுகள் நிகழும் என்பவர் சிலர்.
இவையனைத்தையும் உண்மை என்று நாம் ஒத்துக் கொள்வோமேயானால் இந்த வாதங்களின் மூலம் நமது கணக்கெடுப்பை நாமே தவறு என்று ஒத்துக் கொள்வ்தாகவே முடியும். அப்படியென்றால் இத்தகைய தவறுகளையுடைய புள்ளி விபரங்களை வைத்துத்தான் நமது அரசு நடைபெறுகின்றது என்பதும், அதற்கு எதற்காக இத்தனை கோடிகளை வாரி இறைக்க வேண்டும் என்பதும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவையாகத் தோன்றும்.
நல்ல வேளையாக இவர்களின் உண்மையான பயம் சமீபகாலமாக வெளிவரத் துவங்கி விட்டது. அதாவது 3 மற்றும் 4.07.2010 ஆகிய தேதிகளில் பத்திரிக்கைச் செய்திகளின் விபரம் அதை தெளிவு படுத்தியுள்ளது. அதாவது ஜாதிவாரியாகக் கணக்கெடுத்தால் தற்பொழுது உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அதிகப்டச இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையான 50 சதவிகிதம் கேள்விக்குள்ளாக்கப்படுமாம். மேலும் சரியான முறையில் இட ஒதுக்கீட்டு பலன்களைப் பெறாத சமூகங்கள் உள் ஒதுக்கீடு கோரும் அபாயம் வந்து விடும் என்பதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்த மேல்தட்டு மக்கள் செயல் படுவது இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான். அதை பட்டவர்த்தனமாகக் கூற இயலாமல் தங்களால் ஆன தடைகளையிட முயன்று வருகின்றனர். அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில் இந்தக் கணக்கெடுப்பானது அவர்களின் அரசியலை முழுமையாக ஜாதீயமாக்கிவிடும் என்பதுதான்.
இது கூட ஒன்றும் புதிதான சமாச்சாரமல்ல. விடுதலை பெற்ற பின் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அந்தந்தத் தொகுதியின் வாக்காளர்களின் சாதிதான் வேட்பாளர்களின் தேர்வில் முன்னின்றது. இன்று வரை அதுதான் தொடர்கதை. இது மிகப் பிரபலமான விரல் விட்டு எண்ணக் கூடிய சிலருக்குப் பொருந்தாமற் போகலாம். பெரும்பான்மைக்கு இதுதான் பொருந்தும்.
முன்னாள் வேளாண் அமைச்சர் சி சுப்பிரமண்யம் முதல் இன்னாள் உள் துறை அமைச்சர் வரை தொகுதியைத் தேர்ந்தெடுத்தது மற்றும் தேர்ந்தெடுப்பது அவர்களின் சாதி வாக்குகளின் அடிப்படையில்தானேயொழிய வேறெதனால் ? இதில் அரசியல் கட்சிகளை விடவும் பாதிக்கப்படப் போவது மேல்தட்டு அரசியல்வாதிகளும் அவர்கள் இன அதிகாரிகளும்தான். அதனால்தான் அவர்கள் இதனை தங்கள் ஊடக நண்பர்களுடன் இணைந்து எதிர்த்து வருவதுடன் ஏதோ பலமான எதிர்ப்பு இருப்பதாகவும் காட்ட முயற்சி செய்கின்றனர்.
இன்னுமொரு விநோதமாக இவர்கள் இந்த கணக்கெடுப்பானது இட ஒதுக்கீட்டு அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தும் நிலை உருவாகும் என அச்சப்படுவது இந்த பத்திரிக்கைகளின் செய்திகளில் தெரிய வரும் மற்றொரு உண்மை. ஆனாலும், இவர்களாகவே உச்ச நீதிமன்ற கட்டுப்பாடான உயர்ந்த பட்ச இட ஒதுக்கீட்டு அளவான 50 சதவிகிதம் என்பதை அரசால் பாராளுமன்றத்தின் மூலம் மாறுதல் செய்ய முடியாது என்று இப்பொழுதே தீர்ப்பு வழங்க முயற்சி செய்வதும் 03.07.2010 அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் பார்த்தவர்களுக்குத் தெரியும். இதிலிருந்து இந்தப் நாளிதழ்களும், முடிவெடுக்கும் திறன் படைத்தோரும் அவர்களின் பிரச்சனைக்கு அவர்களாகவே தீர்வு அல்லது தீர்ப்பு எழுத முற்படுவது தெரியும். இந்த உச்ச பட்ச இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு எந்தச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்படாத ஒரு முடிவை இவர்களாகவே உறுதி செய்வதும் அதை ஒரு பொதுக் கருத்தாக்கி நாளிதழ்கள் வழியே நமக்கு மூளைச் சலவை செய்வதும் இன்று வெட்ட வெளிச்சமாகின்றது.
அதே சமயம் இந்தக் கணக்கெடுப்பானது தற்போது உள்ள இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடுக்கான கோரிக்கைகளை வலுப் பெற வைத்திடும் என்று அதிலும் தங்கள் கோணல் புத்தியை வெளிப்படுத்தி செய்தி வெளியிடுகின்றனர். அதாவது நமக்கான ஒதுக்கீட்டில் நாம் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ள இந்தக் கணக்கீடு வழி வகுக்கும் என்று பிரச்சனைகளை திசை திருப்பும் தந்திரமும் சாமர்த்தியமும் இந்தச் செய்திகளைக் கூர்ந்து கவனித்தால் தெரியும்.
முதலில் காலங்கடந்து விட்டது. ஏற்கெனவே கணக்கெடுப்பு துவங்கி விட்டது. அதற்கான படிவங்கள் அனுப்பப் பட்டு விட்டதால் இனி அதை மறுபடியும் மாற்ற இயலாது என்பதுதான் நமது அமைச்சர்கள் கூறியவை. ஆனால் இன்று அதே அரசாகட்டும் அமைச்சர்களாகட்டும் இன்னும் கால அவகாசம் இருக்கின்றது, பயோ மெட்ரிக் எடுக்கப்படும் சமயத்தில் அதாவது 2011 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் கூட கணக்கெடுப்பில் சாதி வாரியான கணக்கினை நாம் இணைத்து எடுக்க இயலும் என்கின்றனர். ஆம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் அரசால் நடத்த முடியும், கூடாது என்றால் அதற்கும் ஆயிரம் காரணங்கள் கைவசம் உண்டு என்பதும் இந்தப் பிரச்சனையில் வெளியாகும் முற்றிலும் எதிரும் புதிருமான கருத்துக்களின் மூலம் மீண்டும் தெளிவாகின்றது.
அமைச்சர்கள் குழு இரண்டு முறை கூடிக் கலைந்து விட்டது. அதில் கிட்டத்தட்ட அனைத்து முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அமைச்சர்களும் இதனை எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் அதைத் தவிர வேறென்ன செய்வார்கள். இதனை ஆதரிக்க அவர்கள் எப்படி சம்மதிப்பார்கள்? சமூக நீதிக்கான அமைச்சர் நமது பிரதமர் அவர்கள் பாராளுமன்றத்தில் கொடுத்த உறுதி மொழியினைக் கூறுகின்றார் என்று அவரிடம் இது குறித்த பிற வாதங்கள் இல்லாதது போன்ற தோற்றத்தினை உருவாக்க எத்தனிக்கின்றனர்.
சட்ட அமைச்சர் இதை முழுமையாக ஆதரிக்கின்றார். சிதம்பரமோ தனக்கு தனிப்பட்ட முறையில் இதில் உடன்பாடு இல்லாவிடினும் தானும் குழுவின் முடிவை ஆதரிக்கத் தயாராயிருக்கின்றேன் என்கிறார். குழுதான் முடிவே எட்டாமல் கலைகின்றதே? இதனை ஆறப் போட இப்போது குழுவானது அனைத்துக் கட்சிகளின் கருத்தைக் கேட்க முடிவு செய்துள்ளதாகக் கூறுவது இந்தப்பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியேயன்றி வேறொன்றுமில்லை. அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத்திலேயே ஒருமனதாக ஒத்துக் கொண்ட பொழுதில் மீண்டும் இந்தக் கருத்துக் கேட்புக்கான தேவை என்ன?
நாடு நமது நாடு, நாம் அதை ஆட்சி செய்ய வேண்டும். அறிவில் சிறந்த, ஆளுமை நிரம்பிய, அதிகாரமுடைய வெள்ளையரை நாம் ஏன் வெளியேற்றினோம்? நம்மை நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்றுதானே வெளியேற்றினோம். அவர்கள் அறிவாளிகள் அவர்களே நம்மை ஆட்சி செய்யட்டும் என்று விடவில்லையே? அதே போல் நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிய அதிகாரப் பங்க்ீடு இல்லாத நிலையில் கணக்கெடுப்பு நிகழ்கின்றதோ இல்லையோ பெரும்பான்மை மக்களுக்கு உரிய பிரதி நிதித்துவம் ஆட்சியில் இல்லையென்பது வெட்கக்கேடானது இல்லையா? அப்படி அவர்கள் உணருமுன் அவர்களுக்கான பங்கினைத் தர இந்த அரசானது தன்னாலான முயற்சிகளைச் செய்ய வேண்டுமா இல்லையா?
எந்த சுதந்திர நாட்டிலாவது பெரும்பான்மை மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவதை நாம் கேட்டதுண்டா? அது இந்தியாவில்தான் நிகழும்.இதற்காகத்தான் சமூக நீதிப் போராளிகள் அல்லும் பகலும் போராடினர்.இன்றும் அது போராட்டமாகத்தான் உள்ளது.தங்களின் அனுபவ பாத்தியதையை விட இயலாத மேல்தட்டு வர்க்கம் அனைத்து வகைகளிலும் தடுக்க முயல்கின்றது.
அதனால்தான் ஜாதி அரசியல் என்று சமூக நீதிக்கான கட்சிகளின் அரசியலையும் அதில் ஈடுபடும் அரசியவாதிகளை ஜாதீயவாதிகளாகவும் சித்தரிக்கும் மேல்தட்டு இந்துக்கள் வரிந்து கட்டிக் கொண்டு மதவாதத்தை மட்டும் தூக்கிப் பிடித்து நிலை நிறுத்த தங்களின் பண மற்றும் ஊடக மேலாதிக்கத்தின் மூலம் முயல்வது இனப்பற்றினால்தான்.இதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் வகுப்பு வாரி உரிமை கோரி போராட்டம் நடத்தினார். இன்று அது உள் ஒதுக்கீடு என்ற பெயர் மாறி வர சாத்தியமுள்ளதே தவிர வராமற் போகும் சாத்தியம் குறைவு.
மக்களாட்சியின் அடிப்படை கூறு என்ன? மக்களுக்கானதுதானே? அந்த மக்களில் பெரும்பான்மையானவர்களை எவ்வளவு காலம் தவிக்க விட இயலும். விழித்தால் நிலை கொள்ள முடியாது அதன் எதிர்ப்பாளர்கள். அதனால்தான் இன்று வாக்கு வங்கி அரசியல் என்று வரிந்து கட்டுகின்றது மேல்தட்டு ஊடகக் கும்பல். அதற்கு சில எலும்புத் துண்டுகளைப் பொறுக்கிக் கொண்டு வாலாட்டும் நம்மவர்கள் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் வர்ணாசிரமத்தின் வால்கள்.
வாக்கு வங்கிதான் மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவம். எனவே பெருவாரியான மக்களை விடுத்து எந்த அரசாங்கமும் அமைவது இனியும் சாத்தியமாகாது.வாக்கு வங்கி அரசியலில் இதை தடுத்து நிறுத்த எந்தக் கொம்பனா(ரா - ஒரு மரியாதைக்காக?? )லும் இயலாது? இதைத் தடுக்க எண்ணும் அரசியல் கட்சிகளும், தலைவர்களும், அமைச்சர்களும் காணாமற் போவது நாளைய நிஜம். அதனால்தான் எப்படியாவது தகிடு தத்தம் செய்து இதனை நிறுத்த பல முற்பட்ட ஜாதி அமைச்சர்களும் சமூக நீதி தேவைப்படாத நிலையை அடைந்த பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் தங்களுடன் கூட்டணி சேர்த்துக் கொண்டு முயன்று வருகின்றனர்.விழித்துக் கொள்ள வேண்டியது நாமும் நமது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அரசியல்வாதிகளும்தான்.
- ரெ.கா.பாலமுருகன் (