இந்துமதவாதக் கட்சியான பாஜகவிற்குத் திடீரென்று இஸ்லாமியப் பெண்களின் மீது அளவுகடந்த பற்றும் பரிவும் ஏற்பட்டு விட்டது. எனவே அவர்களைக் காப்பாற்ற, ‘முத்தலாக்’ முறையைச் சட்டப்படி தடை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது.

முத்தலாக் முறை கூடாது என்பதில் நமக்கும் கருத்து வேறுபாடில்லை. இஸ்லாமியப் பெண்களும் அதனை எதிர்த்தே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால் அதனைச் சாக்காக வைத்துக் கொண்டு, பாஜக தன் கொடிய முகத்தை வெளிப்படுத்துகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஏற்கனவே ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் (Uniform civil code) கொண்டுவர முயன்று இன்றைய மத்திய அரசு தோற்றது. இப்போது முத்தலாக் என்பதை பிடித்துக் கொண்டு சிறுபான்மையினரை நசுக்க முயல்கிறது.

மணமுறிவு (விவாக ரத்து) என்பது குடிமைச் சட்டத்தின் (civil law) கீழ் வரும் ஒன்று. இந்து, கிறித்துவர்களுக்கு அப்படித்தான் உள்ளது. இப்போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அதனைக் குற்றவியல் சட்டத்தில் (Criminal law) கொண்டுவர முயல்கிறது இந்திய அரசு. முத்தலாக் சொன்னால் அது சட்டப்படி செல்லாது என்று சொல்லிவிட்டால் போதாதா? அதனைக் குற்றமாக்கி, மூன்று ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை என்றால், என்ன நியாயம்?

இந்த ஒருதலைப்பட்சமான சட்ட முன்வடிவை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டாமல், நிதானமாக முடிவெடுக்க நிலைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்பதே சரியானது.

சாதிக்கு ஒரு நீதி பேசியவர்கள், இப்போது மதத்திற்கு ஒரு நீதி பேச முயல்கின்றனர். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!

Pin It