உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்பு மூன்று நாட்களாக சோனியாவிடம் தொடர்பு கொண்டு கலைஞர் கருணாநிதி பேச முயன்றிருக்கிறார் - ஆனால் பேச முடியவில்லை. (இதை முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ள கி.வீரமணி கலைஞரே தம்மிடம் கூறியதாக கூறியிருக்கிறார்)
உண்ணாவிரதத்தை தொடங்கிய பிறகாவது சோனியா தமிழகத்தின் மூத்த தலைவர் என்று மதித்து பேசினாரா? - இல்லை! ஒரே வாரத்தில் இரண்டு முறை சோனியாவுக்கு கலைஞர் கருணாநிதி தந்தி கொடுத்ததாக ‘முரசொலி’ கூறுகிறது. இரண்டு முறை தந்தி கொடுத்த பிறகும், சோனியா இப்பிரச்சினையில் மனமிறங்கி, முதலமைச்சரிடம் பேச வந்தாரா? - இல்லை!
தமிழருக்கு எதிரான போரை நிறுத்துவதில் இரும்புச் சுவர்போல் வளையாது இருக்கும் சோனியா, தமிழகத்தின் முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் மதிக்கத் தயாராக இல்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் சோனியாவை எதிர்த்துப் பேசுவோரை காவல்துறை அடக்கியது. சோனியா கொடும்பாவியை எரித்து எதிர்ப்புக் காட்டியோரை - அடக்குமுறை சட்டங்களை ஏவி, தனது சோனியா பக்தியை வெளிப் படுத்தினார் கலைஞர் கருணாநிதி, நாட்டின் எந்த அரசுப் பதவியிலும் இல்லாத சோனியாவை, நாட்டின் அதிபராகவே கருதி செயல்பட்டார் கலைஞர் கருணாநிதி.
சொக்கத் தங்கம் என்றார்; ஈழத் தமிழர் பிரச்சினையில் தமது கருத்தும், சோனியாவின் கருத்தும் ஒன்று தான். ஒரு சிறு வேறுபாடுகூட கிடையாது என்று கூறி பூரித்தார். இந்த உணர்வுகளை சோனியா மதித்தாரா? தமிழ் நாட்டைச் சார்ந்த உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான், முதல்வரிடம் உறுதி தந்திருக்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங் கூட உறுதி கூறி, போராட்டத்தை முடிக்க, முன் வரவில்லை;
சோனியாவோ பேசவும் முயற்சிக்கவில்லை. சோனியாவின் துரோகங்களை திரையிட்டு மறைத்துக் கொண்டு - அவரைக் காப்பாற்ற முயன்று - தனக்கும் அவப்பெயரை தேடிக் கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதிக்கு சோனியா தரும் மதிப்பு இது தானோ? தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்களே! இவ்வளவு அவமதிப்புகளையும் சுமந்து கொண்டு காங்கிரசுக்கு நீங்கள் வாக்களிக்கத்தான் போகிறீர்களா?
ஆளும் கட்சியின் காவல்துறை
ஈழத் தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்த பெரியார், திராவிடர் கழகத் தோழர்களை கைது செய்து, பிணையில் வரமுடியாத வழக்குகளைப் போட்டிருக்கிறது தி.மு.க.வின் காவல்துறை. என்ன வழக்கு தெரியுமா? இலங்கை அரசுக்கும் இந்தியாவுக்குமிடையே உள்ள நல்லுறவை குலைத்தார்கள் என்பது வழக்கு! (பிரிவு 137) இப்போது முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, இதே ஈழப் பிரச்சினையை முன் வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினாரே, அவருக்கும், பெரியார் தி.க.வினர் மீது போடப்பட்ட சட்டப் பிரிவு பொருந்தாதா? திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி முதலமைச்சரும், அவர்களது கட்சி முன்னணியினரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர்களே இடங்களை தேர்வு செய்து கொண்டு போராட்டங்களைத் தொடங்கினார்களே; இதையே வேறு அமைப்புகள் இப்படி செய்திருந்தால் காவல்துறை அனுமதித்திருக்குமா? ஆளும் கட்சி எப்படி வேண்டுமானாலும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாமா?
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கலைஞர் கருணாநிதியை அவமதித்த சோனியா
- விவரங்கள்
- பெரியார் முழக்கம் செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009